சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிஃப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கெதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது.
அதேவேளை புலிக்கொடிகளை ஏந்திய தமிழ் இளைஞர்கள் பலர் ஒரே நேரத்தில் ஆட்டம் நடந்த மைதானத்தில் இரு தடவைகள் நுழைந்தும் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மைதானத்துக்கு வெளியே ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கையில் தமிழர்களுக்கெதிராக இலங்கை அரசாங்கத்தால் அநியாயங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் கூறுவதற்காகவே இந்த அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறினார்கள்.