சமீப நாள்களாக மத்திய அரசுக்கு எதிராக முலாயம் சிங் கடுமையான கருத்துகளைக் கூறி வந்ததையடுத்து அவர் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக தகவல்கள் வெளியானது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், எனினும் மத்திய அரசு தனது பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னெளவில் முலாயம் சிங், மத்திய அரசின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 8 முதல் 9 மாதங்களே இருக்கும் நிலையில் எதற்காக ஆதரவை வாபஸ் பெற்று ஆட்சியை கவிழ்க்க வேண்டும்? என்று கேட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை பாஜகவின் நரேந்திர மோடி முதல்வராக உள்ள குஜராத்துடன் ஒப்பிட்டு முலாயம் சிங் பேசினார்.
மாநிலத்தில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்ட அவர், இது போன்ற திட்டங்கள் குஜராத்தில் நிறைவேற்றப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இத்தனை நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், அது குறித்து அனைவரும் பாராமுகமாக உள்ளனர் என்று ஆதங்கம் தெரிவித்தார்.
மூன்றாவது அணி: மூன்றாவது அணி உருவாவது உறுதி. 2014 தேர்தலுக்குப் பின், மூன்றாவது அணியைச் சேர்ந்தவர்தான் பிரதமராகத் தெரிவு செய்யப்படுவார்.
அந்த அணிக்கு நான் தலைமை வகிப்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும். பிரதமர் ஆவது பற்றி நான் எப்போதும் எண்ணியதில்லை, குறிப்பாக அதுபற்றி இப்போது எனக்கு எந்த சிந்தனையும் இல்லை.
ஏமாற்றும் காங்கிரஸ்: தனக்கு ஆதரவு அளிப்பவர்களை ஏமாற்றுவதுதான் காங்கிரஸின் வழக்கம். காங்கிரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி ஆதரவளித்தார். அவரது கட்சி மத்திய அரசிலும் இடம்பெற்றது. ஆனால், திமுகவைச் சேர்ந்த அமைச்சரை பிரச்னையில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்பியது காங்கிரஸ் என்றார் முலாயம் சிங்.
மேலும் பாஜகவுடன் பிற கட்சிகள் வேண்டுமானால் கூட்டணி வைக்கலாம். நாங்கள் வைக்கமாட்டோம் என்றார் முலாயம் சிங். |
No comments:
Post a Comment