click me

Saturday, March 30, 2013

ரெயிலில் அனுப்பிய எஸ்.எஸ்.எல்.சி. விடைதாள்கள் சேதம்: மறு தேர்வு நடத்தப்படுமா?


தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தமிழ் 2-ம் தாள் தேர்வு நடந்தது. கடலூர் மாவட்டம் பி.முட்லூரில் அரசு பள்ளி மையத்தில் மாணவர்கள் எழுதிய இந்த பரீட்சையின் 545 விடைத்தாள்கள் 3 பண்டல்களாக கட்டப்பட்டது.

பின்னர் இந்த தேர்வு தாள்கள் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருச்சியில் அந்த பண்டலை இறக்கிய போது அதில் 3 கட்டுகள் குறைந்திருந்தன. அவைகளை தேடியபோது விருத்தாசலம் ரெயில் தண்ட வாளத்தில் சிதறி சேதமடைந்து கிடந்தன. இது பற்றி கல்வி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.


சேதமடைந்த விடைத்தாள்களில் சில குப்பையோடு சேர்ந்து எரிக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது. இதுபற்றி அறிந்த தாசில்தார் காந்தி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். ஆர்.டி.ஓ. ஆனந்தகுமாரும் விசாரணை நடத்தினார். சம்பவம் பற்றி கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் கூறியதாவது:-

பி.முட்லூர் தபால் நிலையம் மூலம் ரெயிலில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்கள் 3 பண்டல்களாக அனுப்பிவைக்கப்பட்டது. இதில் 177 விடைத்தாள்கள் இருந்த ஒரு பண்டல் மட்டும் தண்டவாளத்தில் தவறி விழுந்துள்ளது. அந்த விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. முழுமையான விசாரணைக்கு பிறகு பாதிப்பு குறித்த விபரம் தெரியவரும். விடைத்தாள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாக இதுவரை தகவல் கிடைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விருத்தாசலம் ரெயில்வே நிலைய அதிகாரியிடம் இருந்து சேதமடைந்த விடைத்தாள்களை சரிபார்த்து முதன்மை கல்வி அலுவலர் பெற்றுகொண்டுள்ளார். அவை, அரசு தேர்வுகள் இயக்கத்தில் பெறப்பட்டவுடன் பரிசீலனை செய்யப்படும். அந்த விடைத்தாள்களுக்கு சம்பந்தப்பட்ட மாணவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாதபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அந்த மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை.

No comments:

Post a Comment