click me

Thursday, October 11, 2012

ஈரான் தலைவர் அயதுல்லா கொமேனி பொருளாதார தடைகளை முறியடிப்போம்

பொருளாதார தடை என்பது எங்கள் நாட்டின் மீது தொடுத்துள்ள யுத்தம், இதை முறியடிப்போம் என ஈரான் தலைவர் அயதுல்லா காமினி தெரிவித்துள்ளார்.
ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சுமத்தி உள்ளதுடன், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
மேலும் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் மற்ற நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டு நாணயத்தின் மதிப்பு 40 சதவிகிதம் சரிந்து விட்டது.
இதுகுறித்து ஈரான் தலைவர் அயதுல்லா காமினி கூறுகையில், ஈரான் மீது ராட்சத தனமான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய புரட்சி உருவான 79ஆம் ஆண்டிலிருந்தே ஈரான் பொருளாதாரத் தடைக்கு இலக்காகி விட்டது.
அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படவில்லை என பலமுறை மறுத்தும், சந்தேகப்படும் ஐரோப்பிய நாடுகள் நம் நாட்டின் மீது பொருளாதார தடையை அமல்படுத்தியுள்ளது முட்டாள் தனமானது.
சொல்லப்போனால் இந்த பொருளாதாரத் தடை ஈரான் மீது தொடுக்கப்பட்ட போர் தான். இதை நாம் வெற்றி கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியச் செயல்பாடு பட்டினியை சமாளிப்பதில்'ஏமாற்றமளிக்கிறது'

இந்தியாவில் பட்டினிகடந்த பத்தாண்டுகளில் பசி பட்டினியை எதிர்த்துப் போராடுவதில் தெற்காசிய நாடுகளை விட, ஆப்ரிக்க நாடுகள் கூடுதல் வெற்றி கண்டிருக்கின்றன என்று உலகில் பசி பட்டினி குறித்த அறிக்கை ஒன்று கூறுகிறது. 
உலக பட்டினி சுட்டெண் என்ற இந்த அறிக்கை பலமான பொருளாதார வளர்ச்சி, ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் உணவுப் பற்றாக்குறையை மற்றும் குறைக்கவும் போஷாக்கின்மையை குறைக்கவும் உதவியிருந்தாலும், எரித்திரியா மற்றும் புருண்டி போன்ற நாடுகளில் இன்னும் கவலையளிக்கும் அளவுக்கு பட்டினி நிலவுவதாகக் கூறுகிறது. 
பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ந்திருந்தாலும், 
பட்டினியை சமாளிப்பதில் இந்தியாவின் செயல்பாடு ஏமாற்றமளிப்பதாக இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் வருமானம் சமமின்றி இருப்பது, மற்றும் பெண்கள் இன்னும் கீழ் நிலையில் இருப்பதை அது இதற்குக் காரணமாகக் கூறுகிறது.

முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரூ.10.2 இலட்சம் கோடி சொத்துக்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
சீனாவை சேர்ந்த ஹூருன் என்ற ஆராய்ச்சி நிறுவனம் இந்த புள்ளி விபர பட்டியலை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் முதலிடத்தில் முகேஷ் அம்பானியும், இரண்டாம் இடத்தில் ஏர்செல்-மிட்டல் நிறுவன தலைவர் எல்.என். மிட்டல் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.94 ஆயிரத்து 500 கோடி ஆகும்.
இவர்களைத் தொடர்ந்து விப்ரோ மென்பொருள் நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜி, சன் பார்மசூட்டிக்கல் நிறுவனம் திலிப்ஷாங்கி, ஷபூர்ஜி பல்லோஞ்ஜி அண்ட் கோ (டாடா நிறுவனத்தில் மிகப் பெரிய பங்குதாரர்) பல்லோஞ்ஜி மிஸ்ட்ரா, ஈஸ்ஸா எனர்ஜியின் ஷாஷி மற்றும் ரவிரூயா, கோத்ரெஜ் குழுமத்தின் ஆதி கோத்ரெஜ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
டி.எல்.எப். நிறுவனத்தின் குஷால் பால்சிங், கிராஸிம் நிறுவனத்தின் குமாரமங்கலம் பிர்லா, எச்.சி.எல். நிறுவனத்தின் சிவ் நாடார், பார்தி ஏர் டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல் ஆகியோர் அதற்கடுத்த இடங்களில் உள்ளனர்.

ஜேர்மனியில் புதிய சட்டம் விரைவில் அறிமுகம்:சுன்னத் சட்டப்பூர்வமானது

முஸ்லிம்கள் தங்களது ஆண் பிள்ளைகளுக்கு செய்யும் சுன்னத் சட்டப்பூர்வமானது என்பதை அறிவிக்கும் வகையில் புதிய சட்டமொன்று ஜேர்மனியில் அறிமுகமாக உள்ளது.
முஸ்லிம் மக்களும், யூத மக்களும் தங்களது ஆண் பிள்ளைகளுக்கு சுன்னத் செய்வது சட்டவிரோதமான காரியம் என கலோன் நீதிமன்றம் கடந்த ஜீன் மாதம் தீர்ப்பளித்திருந்தது. இதற்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் மதக் காரணங்களுக்காக செய்யப்படும் இச்செயல் சட்டப்பூர்வமான ஒரு காரியம் தான் என தெளிவுபடுத்தும் சட்டம் ஒன்றை ஜேர்மனி அரசு கொண்டு வரவுள்ளது.
மேலும் இச்சட்டத்தில் மருத்துவ ரீதியில் பயிற்சி பெற்றவர்களே இதனை செய்ய வேண்டும், சுன்னத் செய்யும் போதும், செய்த பின்னரும் எழக்கூடிய பிரச்சினைகள் பற்றி பெற்றோர்களுக்கு முழுமையாக அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளும் இடம்பெற உள்ளன.

தமிழக சட்ட சபையின் புதிய சபாநாயகராக ப. தனபால் போட்டியின்றி தெரிவானார்.


நேற்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனுவில் அதிமுக சார்பில் தனபால் சார்பில் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று காலை தமிழக சட்ட சபைக் கூட்டம் தொடங்கியதும், அதிமுக வேட்பாளர் ப. தனபால், சபாநாயகராக போட்டியின்றி தெரிவானதாக அறிவிக்கப்பட்டது.
ப. தனபால், தமிழக சட்டப்பேரவையின் துணைத் தலைவராக இருந்தவர்.
ஏற்கனவே சபாநாயகராக இருந்த டி. ஜெயக்குமார் பதவி விலகியதை அடுத்து, சபாநாயகர் பொறுப்புகளை துணை சபாநாயகர் தனபாலே கவனித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹஜ் பயணிகள் 421 பேர் தவிப்பு:விமானம் மீது டிரக் மோதியதால் பரபரப்பு

தமிழ்நாட்டிலிருந்து புனித ஹஜ் பயணம் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா சார்பில் லிகேடி விமானம் இன்று காலை புறப்படத் தயாராக இருந்தது.
இந்த விமானத்தில் 421 பயணிகள் ஹஜ் செல்வதற்காக இருந்தனர். இந்நிலையில் விமானத்தை ஓடு பாதைக்கு தள்ளும் வாகனம் மூலம் தள்ளிக் கொண்டு வந்தபோது அங்கு டிராக்டரின் இரும்பு கம்பி நீட்டிக் கொண்டிருந்தது. அதில் விமானத்தின் இறக்கை மோதியதில் இறக்கை சேதம் அடைந்தது.
இதனால் விமானம் குலுங்கியதையடுத்து உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இருப்பினும் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினார்கள். உடனே ஊழியர்கள், அதிகாரிகள் விரைந்து வந்து பயணிகளை பத்திரமாக கீழே இறக்கினார்கள்.
அவர்கள் விமான நிலைய ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து விமானம் புறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது பொறியியலாளர்கள் வந்து விமானத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்கிறார்கள்.
இதில் திருப்தி ஏற்பட்டால் அந்த விமானம் புறப்பட்டுச் செல்லும், இல்லையெனில் மும்பையில் இருந்து வேறு விமானம் வரவழைக்கப்பட்டு அதில் 421 பயணிகளும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் Windows XP பயன்படுத்துபவர்களுக்கு சிக்கல்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய Internet Expolrer பதிப்பு 8க்கான பாதுகாப்பு உதவியை, வரும் நவம்பர் 15ஆம் திகதி முதல் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இதனால் Windows XP சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் Windows XP இயங்குதளத்தில், Internet Explorer பதிப்பு 9 மற்றும் 10 இயங்காது.
எனவே இவர்கள் பாதுகாப்பில்லாமல், பதிப்பு 8ஐப் பயன்படுத்த வேண்டும் அல்லது புதிய Hardware மற்றும் இயங்குதளத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும்.
அக்டோபர் 26ஆம் திகதி Windows 8 இயங்கு தளம் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வெளியாக இருக்கிறது. நவம்பர் 15ஆம் திகதி Internet Explorer 8க்கான உதவி நிறுத்தப்படுகிறது.
இதன் பின்னர் Internet Explorer மூலம் Google Application Service தளத்திலிருந்து ஏதேனும் பெற விரும்பினால், உலாவியை மேம்படுத்த நமக்கு செய்தியும் அறிவுரையும் வழங்கப்படும்.
Internet Explorer 7க்கான சப்போர்ட் நிறுத்தப்படுகையில் அது உலகில் 7% பேரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் Internet Explorer பதிப்பு 8 உலக அளவில் பரவலாக 25% பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Internet Explorer 8 மூலம் Gmail, Gtalk மற்றும் Google Calender வசதிகளும் கிடைக்காமல் போகலாம். ஒரு கட்டத்தில் உள்ளே சென்று பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம்.
இதனால் Windows XP பயன்படுத்துபவர்கள் Firefox அல்லது Chrome உலாவிக்கு மாறலாம். இந்த உலாவிகள் XPயில் இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை.