லண்டனில் பாராலிம்பிக் போட்டி பரிசளிப்பு விழாவில் மாற்றுத்திறன் வீரர் ஒருவர் இளவரசி கேத் மிடில்டனுடன் கைகுலுக்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் சாதனை படைத்த வீரர்களுக்கு பரிசளிக்கும் விழா கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. பிரிட்டிஷ் அரச குடும்பம் சார்பில் இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் கலந்து கொண்டார்.
வீரர்களுக்கு பரிசுகளையும் பதக்கங்களையும் வழங்கினார். வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் வீரர்களுடன் கைகுலுக்கி பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தடகள போட்டியில் ஈரான் வீரர் மெர்டாட் கரம் சேத் (40) என்பவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அவரை பாராட்டி பதக்கத்தை வழங்கி கைகொடுத்தார்.
ஆனால் ஈரான் வீரர் கைகுலுக்க மறுத்து பதக்கத்தை பெற்றுக் கொண்டு சென்று விட்டார். விழா மேடையில் நடைபெற்ற இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இதுகுறித்து அரண்மனை வட்டாரங்கள் கூறுகையில், ‘இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த ஆண்கள் பொது இடங்களில் பெண்களுடன் கைகுலுக்குவதில்லை’ என்றனர்.
மேலும், கடந்த ஆண்டில் ஆப்கனுடனான வாலிபால் போட்டி முடிந்த பின்பு, ஈரான் வீரர்கள் சிலர் பெண் நடுவருடன் கைகுலுக்கியது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.







No comments:
Post a Comment