ப்ரீ-பெய்டு செல்போன்களுக்கு ஐ.எஸ்.டி. வசதி ரத்து: ஓரிரு நாள்களில் அறிவிப்பு
சென்னை, செப். 9: ப்ரீ-பெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ஐ.எஸ்.டி. வசதி ரத்து செய்யப்படும் என்று தொலைதொடர்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ப்ரீ-பெய்டு செல்போன் இணைப்புகள் பெறும் போது, ஐ.எஸ்.டி. எனப்படும் சர்வதேச அழைப்பு வசதியும் சேர்த்தே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் போஸ்டு-பெய்டு இணைப்புகளுக்கு இந்த வசதி வழங்கப்படுவதில்லை. இந்த வசதி தேவைப்படும் வாடிக்கையாளர்கள் கூடுதல் முன்வைப்புத் தொகை செலுத்தியே இந்த வசதியை பெறமுடியும்.
இப்போது ப்ரீ-பெய்டு செல்போன் இணைப்புகளுக்கும் ஐ.எஸ்.டி. வசதியை விண்ணப்பித்து பெற வேண்டும் என்ற புதிய விதியை செயல்படுத்த தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) முடிவு செய்துள்ளது என்று தொலைதொடர்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் கூறியது: "ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டினால், பல மடங்கு பணம் கிடைக்கும் என்று சில மோசடி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை குழப்புகின்றன. இதனை நம்பி பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். மேலும், தெரியாத எண்களில் இருந்து வரும் இது போன்ற மோசடி எஸ்.எம்.எஸ்.-களுக்கு பதிலளித்தாலோ, அந்த எண்ணுக்கு போன் செய்தாலோ அதிகப்படியான தொகை போன் பேலன்ஸில் இருந்து எடுக்கப்பட்டு விடுகிறது.
செல்போன்களில் தெரியாத எண்களில் இருந்து வரும் மோசடி எஸ்.எம்.எஸ்.-களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எஸ்.எம்.எஸ்.-களை நம்பி பலர் ஏமாறுகிறார்கள். இது குறித்து பல புகார்கள் வருகின்றன. இந்த மோசடியில் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.
இதனைத் தடுக்க ப்ரீ-பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஐ.எஸ்.டி. வசதியை ரத்து செய்ய டிராய் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த முடிவு அண்மையில் நடந்த டிராய் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகும்.
ப்ரீ-பெய்டு வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் ஐ.எஸ்.டி. வசதியை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு அறிவிப்பு வெளியான 10 நாள்களுக்குள் எழுத்து மூலம் விண்ணப்பம் அளிக்கவேண்டும்.
போஸ்ட்-பெய்டு வாடிக்கையாளர்கள் எப்போதும் போல முன்வைப்புத் தொகையை செலுத்தி இந்த வசதியை பெறலாம்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment