கடலூர் அருகே இளம்பெண் ஒருவர் இன்று அதிகாலைஅடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கடலூர், செப்.9: கடலூர் அருகே இளம்பெண் ஒருவர் இன்று அதிகாலை அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது தாலிசரடு மற்றும் மோதிரம் திருடுபோனது.
கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கம் கெங்கையம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (32). விவசாயியான இவரது மனைவி மாலா (28). இவர்களுக்கு பிரசாத் (9), சுவேதா (8) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சுரேஷ் அருகே உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். பிரசாத் அருகே உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். சுவேதா வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாலா ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரது அருகில் ரத்தம் தோய்ந்த இரும்பு ராடு கிடந்துள்ளது. மாலா மீது மிளகாய் பொடி தூவப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
தாயார் ரத்தவெள்ளத்தில் கிடந்ததை கண்ட குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக மாலாவை அருகே உள்ள கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாலா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்து போன மாலாவின் கழுத்திலிருந்து 7 பவுன் தாலிசரடு மற்றும் மோதிரம் திருடு போயிருந்தது. இதுகுறித்து தூக்கணாப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாலா கொலை நடத்த சில மணி நேரங்களுக்கு பிறகு வீட்டின் அருகே உள்ள விதவை பெண்ணான பிரியா தலைமறைவானதால், கொலையில் அவர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கருதி போலீஸார் பிரியாவை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment