click me

Friday, September 7, 2012

ஆளில்லாத விமான சோதனையில் அதிர்ச்சித் தகவல்!


மேலூர், செப்.7: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பிஆர்பி கிரானைட் உள்ளிட்ட கிரானைட் நிறுவனங்களில் முறைகேடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், வரமுறையில்லாமல் கிரானைட் கற்கள் வெட்டப்பட்டு ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அளவிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிரானைட் கற்களைக் கணக்கெடுக்கும் இப்பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள், பல்வேறு குழுக்களை அமைத்து அளவிட்டு வருகின்றனர். ஆயினும், பல்வேறு இடங்களில் முறைகேடாகப் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கற்களை அடையாளம் கண்டு கணக்கெடுக்க நேரம் கிடைக்கவில்லை. இந்தப் பணி இன்னும் மாதத்துக்கு நீளும் என்று தெரிகிறது. 
இந்நிலையில், வான் வழியே இந்தக் கற்களைக் கணக்கெடுக்க யோசனை கூறப்பட்டது. இந்தப் பணிக்கு அண்ணா பல்கலைக் கழக தொழில்நுட்பத் துறை உதவ முன்வந்தது. 
அதன் யோசனைப் படி, அண்ணா தொழில்நுட்ப பல்கலை, விண்வெளித்துறைப் பேராசிரியர் செந்தில்குமார் தலைமையிலான துறை மாணவர்கள் இணைந்து ஆளில்லாத விமானத்தைத் தயார் செய்து கொடுத்தனர். இதன் உதவியுடன் உதவி ஆட்சியர் ஜெ.சி.ஞானதுரை தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 
திருவாதவூர் - இடையப்பட்டி பகுதியில் முதல் முறையாக ஆளில்லாத விமானம் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், லட்சக் கணக்கான கிரானைட் கற்கள் பதுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. மேலும், இந்தக் கற்களுக்கு இடையே பீரோ, மரப் பெட்டிகள் சிலவும் இருந்துள்ளன. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அவற்றை உடைத்துத் திறந்தனர். அவற்றில், பணப்பெட்டகம் வைக்கப்பட்ட பீரோவைத் திறந்து பார்த்த போது அவை காலியாக இருந்தன. மேலும் 3 பெட்டகங்களைச் சோதனை செய்தபோது, அவற்றில் கட்டுக் கட்டாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக வினாத்தாள்- விடைத்தாள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி  விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
எதையோ தேடப் போய், எதுவோ கிடைத்த கதையாக, கிரானைட் கற்களுக்கு இடையில் பல்கலைக்கழக விடைத்தாள்கள் கிடைத்தது எப்படி என்று அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

No comments:

Post a Comment