click me

Tuesday, September 4, 2012

கனடாவின் கடற்பகுதியில் வந்து சேர்ந்திருக்கும் குப்பைகளை வெளியேற்றும் முயற்சியில் கனடாவுக்கு உதவ ஜப்பான் ஒரு திட்டத்தை உருவாக்கவுள்ளது.


கடந்த 2011ஆம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் உடைந்த கப்பல் பாகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என்று பலவகையான குப்பைகள் கடலலையால் அடித்து வரப்பட்டு கனடா மற்றும் அமெரிக்காவின் பசிபிக் கடல் ஓரத்திலும், கடற்பகுதியிலும் காணப்படுகின்றன.
இக்குப்பைகளை வெளியேற்றுவதற்காகவும் செலவில் ஒரு பகுதியை ஜப்பான் மேற்கொள்ளும் என்று ஜப்பானிய ஊடகங்கள் கூறுகின்றன. இந்த குப்பைகள் சுமார் 1.5 மில்லியன் டன் இருக்கும் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.
கடலியல் நிபுணரான கர்ட்டிஸ் எபெஸ்மேயர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இந்த ஒக்டோபர் முதல் வரும் ஜனவரி, பிப்ரவரிக்குள் இந்தக் குப்பைகளை கடலே அடித்துச் சென்றுவிடும் என்றார்.
சுனாமியால் ஜப்பானிலிருந்து அடித்து வரப்பட்ட ஹேர்லி - டேவிட்சன் மோட்டார் பைக் ஒன்று ஏப்ரலில் துருப்பிடித்த நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஹய்தா க்வாயி கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜப்பானில் உள்ள உரிமையாளரிடம் இந்த வண்டியைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியபோது அவர் மறுத்து சுனாமியால் ஏற்பட்ட சோகத்தின் நினைவாக அருங்காட்சியகத்தில் வைக்குமாறு கூறினார்.
இது தற்போது மில்வாக்கியில் உள்ள ஹேர்லி - டேவிட்சன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கடற்சார் நிறுவனத்தைச் சேர்ந்த மேரிகுரோலி கூறுகையில், டெக்ஸாஸ் நகரத்தின் பரப்பளவுக்குச் சமமான பெரிய அகன்ற பிளாஸ்டிக் படலம் கடலில் உள்ளதால் கடலுக்குப் பல தீமைகள் ஏற்படும் என்றார்.
மேலும், இந்த பிளாஸ்டிக் குப்பைகள் வடக்கு பசிபிக் கடலில் ஹவாய்க்கும், கலிபோர்னியாவுக்கும் இடையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment