click me

Saturday, September 8, 2012

வணிக செய்திகள்,


மதர் டயரி' பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்ந்தது.


புது தில்லி, செப். 8: "மதர் டயரி' பால் விலை
லிட்டருக்கு ரூ. 2 உயர்ந்தது. இந்த விலையேற்றம் இன்று சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
கொழுப்புச் சத்துள்ள பாக்கெட் பால் லிட்டருக்கு ரூ. 39-க்கும், கொழுப்பு நீக்கிய பாக்கெட் பால் லிட்டருக்கு ரூ. 30-க்கும் விற்கப்படும்.
டோக்கன் பால் லிட்டருக்கு ரூ. 28, இருமடங்கு கொழுப்பு நீக்கப்பட்ட பால் லிட்டருக்கு ரூ. 26, ஆடை நீக்கிய பால் லிட்டருக்கு ரூ. 22-க்கும் விற்கப்படும்.
இது குறித்து, "மதர் டயரி' பால் பண்ணை மேலாண்மை இயக்குநர் எஸ். நாகராஜன் கூறியது:
ஓராண்டாக பால் விலையை ஏற்றாமல் கட்டுப்படுத்தி வந்தோம். இப்போது அவசியம் ஏற்பட்டதால் பால் விலை நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
பால் கொள்முதல், மின்சாரம், டீசல், பதப்படுத்தும் செலவினம் உயர்ந்து வருவதால் இந்த விலை உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.

திபாளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை

சென்னை, செப்.,8: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது கடைகள் மூலம் கைத்தறியினால் செய்யப்பட்ட ஆடைகளை விற்பனை செய்து வருகின்றது.


இந்த ஆண்டு எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய டிசைன்களுடன் பட்டு, பருத்தி புடவைகள், வேஷ்டிகள், போர்வைகள், துண்டு, கம்பளம் மற்றும் இதர பொருட்களை தேவையான அளவு இருப்புக்கு ஏற்பாடு செய்து உள்ளது. எதிர்வரும் செப்., 15ம் தேதி முதல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் துவக்க உள்ளது.

30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி அனைத்து கைத்தறி துணிகளுக்கும் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கடன் வசதியுடன் இந்தச் சலுகையையும் பெற்று பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது: ஒரு கிராம் ரூ. 3022


தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது: ஒரு கிராம் ரூ. 3022சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இந்தியாவில் தங்கம் விலையில் மாற்றம் உண்டாகிறது. சமீப காலமாக தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தபடி உள்ளது. பெண் குழந்தைகளை வைத்து இருப்பவர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் விதமாக இந்த விலை உயர்வு இருக்கிறது.
 
தற்போது பண்டிகை மற்றும் திருமண சீசன் என்பதால் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது.
 
நேற்று முன்தினம் சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ. 23 ஆயிரத்து 904 ஆக இருந்தது. எனவே தங்கம் விலை நேற்று ரூ. 24 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று தங்கம் விலை திடீரென குறைந்தது. பவுனுக்கு ரூ. 256 குறைந்ததால், நேற்று ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ. 23,648 ஆக விற்பனை ஆனது.
 
இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயருமா? அல்லது குறையுமா? என்று நகைக் கடைக்காரர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இன்று தங்கம் விலை மிக கடுமையாக அதிரடியாக உயர்ந்தது.
 
நேற்று ஒரு கிராம் ரூ. 2956-க்கு விற்ற தங்கம் ரூ. 66 உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ. 3022 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ. 66 உயர்ந்த காரணத்தால் இன்று ஒரு பவுனுக்கு ரூ. 528 அதிகரித்தது. இதன் காரணமாக சென்னை நகைக்கடைகளில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 24,176 ஆக விற்பனை ஆனது.
 
இந்த சீசனில் இன்றுதான் தங்கம் விலை ரூ. 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. தங்கம் விலை நாளுக்கு நாள் இப்படி உயர்ந்து வருவது நடுத்தரக் குடும்பத்து மக்களிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த காலத்து முதியவர்களோ, தங்கம் விலை மிரட்டுவதாக உள்ளது என்கிறார்கள்.
 
தங்கம் விலையைப் போலவே வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்தது. இன்று பார் சில்வர் ரூ. 2735 உயர்ந்து ரூ. 64,505 ஆக இருந்தது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 69 ஆக விற்பனை ஆகிறது.


No comments:

Post a Comment