click me

Thursday, September 6, 2012

சிவகாசியில் சர்ச்சை கிளப்பியுள்ள அதிகாரிகள் பட்டாசு விபத்து எதிர்பார்த்த ஒன்று தான்

சிவகாசியில் நடந்த பயங்கர பட்டாசு விபத்து ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான் என்று அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு காரணம் அங்கு அத்தனை விதிமுறைகளையும் மீறி பேன்சி பட்டாசுகளை தயாரித்து வந்துள்ளனர்.
பேன்சி பட்டாசுகளைத் தயாரிப்பது பெரும் ரிஸ்க்கானது என்பதால் இந்த விபத்தை அத்தனை பேருமே எதிர்பார்த்துள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது.
சிவகாசி அருகே முதலிப்பட்டி கிராமத்தில் உள்ள ஓம் சக்தி பட்டாசு தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தானது நாட்டையே பதற வைத்துள்ளது.
தீபாவளிக்குத் தயாரித்து குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுள் சரமாரியாக வெடித்துச் சிதறியதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் நடந்த பட்டாசுத் தொழிற்சாலையானது ஒரு விதிமுறையை கூட பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2008ஆம் ஆண்டிலேயே இதற்கான உரிமம் முடிந்து போய் விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இங்கு சட்டவிரோதமாகவும், அனுமதி இல்லாமலும் பேன்சி பட்டாசுகளைத் தயாரித்து வந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்றுதான் இங்கு பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு கழக அதிகாரிகள் வந்து பார்வையிட்டு ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது விதிமுறைகளை மீறி பேன்சி பட்டாசுகளைத் தயாரித்து வந்ததைக் கண்டுபிடித்து எச்சரித்துள்ளனர்.
அந்தப் பட்டாசு ஆலைக்கு பேன்சி பட்டாசுகளைத் தயாரிக்க அனுமதி கிடையாது.மேலும் அளவுக்கு அதிகமாகவும் இங்கு வெடிபொருட்களைக் குவித்து வைத்திருந்தனராம்.
பேன்சி ரக பட்டாசுகளுக்குத்தான் மக்களிடம் அதிக கிராக்கி உள்ளது என்பதால் அதை சட்டவிரோதமாக இங்கு தயாரித்து வருகின்றனர்.
பேன்சி ரக பட்டாசுகளின் வெடிமருந்துகள் மிகவும் அபாயகரமானவை. சற்று கவனக்குறைவாக இருந்தாலும் கூட தீப்பிடித்து கொள்ளக் கூடியவை. இதனால் தான் இவற்றை மிகுந்த பாதுகாப்போடு தயாரிக்க வேண்டியுள்ளது.
ஆனால் சிவகாசி சுற்றுப்புறங்களில் உள்ள பட்டாசு நிறுவனங்கள் மற்ற பட்டாசுகளைப் போலவே இதையும் தயாரித்துக் குவிப்பதால் பெரும் ஆபத்து கூடவே இருந்து கொண்டிருக்கிறது.
பெரும் அபாயம் இருக்கிறது என்று தெரிந்தும் கூட, ஆய்வை நடத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கழக அதிகாரிகள், விதிமுறைகளை மீறி நடத்தப்பட்டு இந்த ஆலைக்கு ஏன் சீல் வைக்க உத்தரவிடவில்லை என்ற கேள்விதான் இப்போது மக்களை குடைந்தெடுத்துக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment