click me

Saturday, December 22, 2012

தூத்துக்குடியில் பள்ளி மாணவி கற்பழித்துக் கொலை 26-ம் தேதி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்


சென்னை, டிச. 22-
 
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து  தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
டெல்லியில் பேருந்து ஒன்றில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்காக டெல்லியிலே உள்ள அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் நாடாளுமன்றத்தில் ஓங்கி குரலெழுப்பியதோடு - நகரிலே உள்ள மாணவர்கள் எல்லாம் அதற்காக இன்று வரை கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தமிழகத்திலே நேற்றையதினம் இந்த அ.தி.மு.க. அரசில், தூத்துக்குடி மாவட்டத்தில், திருவைகுண்டம் அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயதே நிரம்பிய சிறுமி, துடிக்கத் துடிக்க பலாத்காரம் செய்யப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, அந்தக் கொடுமையை அவர் வெளியே சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்.
 
தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு சட்டம், ஒழுங்கு சீர் கெட்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேடி அலைய வேண்டியதில்லை. இந்தக் கொடுமையான சம்பவத்தை கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக் கொலைக்கு அ.தி.மு.க. அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.
 
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த பரிதாபத்திற்குரிய சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் நடத்துவதென்றும், குறிப்பாக மாணவர் அணியின் சார்பிலும், மகளிர் அணியின் சார்பிலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் 26-12-2012 புதன்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment