
அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானத்தை வாக்கெடுப்பில் வென்றதம் மூலம் அரசாங்கம் முறியடித்துள்ளது.
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு ஆதரவாக 253 வாக்குகளும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக 218 வாக்குகளும் விழுந்துள்ளன.
சர்வதேச சூப்பர்மார்க்கெட்டுகள் சந்தைக்குள் வந்தால் இந்தியாவின் சிறு கடைகளும் தொழில்களும் நசுங்கும் என்று எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
ஆனால் சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீடு வந்தால் நாட்டில் பொருளாதார வளர உதவும் என்று அரசாங்கம் வாதிடுகிறது.
காப்பாற்றிய மாயாவதி, முலாயம்
சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்புச் செய்ததன் மூலம், இன்றைய சோதனையில் ஆளும் கூட்டணி எளிதில் வெற்றி பெற்றது.
வாக்கெடுப்புக்கு விடுவதற்கு முன்னதாகவே, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி கட்சியும், அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தன.
இதுபற்றி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங் யாதவ், மத்திய அரசு விவசாயிகளையும், சில்லறை வர்த்தகர்களையும் உதாசீனப்படுத்துவதைக் கண்டித்து வெளிநடப்புச் செய்ததாகத் தெரிவித்தார்.
அதே நேரத்தில், தான் கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தது குறித்துக் கருத்துத் தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ், ''சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸோடு கை கோர்த்துக் கொண்டன. பேச்சளவில் எங்களுடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், வாக்களித்ததோ அரசுக்கு ஆதரவாக. சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்ப்பவர்கள் யார் என்பது இன்று நாட்டு மக்களுக்குத் தெரிந்துவிட்டது. அவர்கள் உண்மையில் எதிர்ப்பதாக இருந்தால், வாக்களிப்பில் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால், தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சரியான முடிவெடுப்பார்கள்’’, என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.
அதே நேரத்தில், பாஜக கொண்டு வந்த தீர்மானம் அரசியல் நோக்கம் கொண்டது என்றார் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத், ''மாநிலங்களின் முடிவுக்கு விட்டுவிட்ட பிரச்சினையை பாஜக தீர்மானமாகக் கொண்டு வந்திருக்கிறது. இது முழுக்க முழுக்க அரசியல். இது பாஜக அரசியலுக்கு எதிரான வெற்றி. அந்தக் கட்சி, இந்த நாட்டு மக்களையும் அரசியல் கட்சிகளையும் திசை திருப்ப முயல்கிறது’’, என்றார் கமல்நாத்.
இன்றைய வாக்கெடுப்பில், ஆளும் கூட்டணியில் உள்ள திமுக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தாலும், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை தாங்கள் எதிர்ப்பதாகக் கூறியுள்ளது.
அரசுக்கு எதிராக வாக்களிப்பதன் மூலம், மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க திமுக முடிவெடுத்ததாக திமுக தலைவர் கருணாநிதி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
வாக்கெடுப்புக்குப் பிறகு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் சதி முறியடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த வாக்கெடுப்பில் தோற்றாலும் அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுமே தவிர, அரசு பதவி விலக வேண்டிய கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment