இலங்கையின் வடக்கே வன்னிபிரதேசத்தில் வியாழக்கிழமை இரவு வரையில் இரண்டு தினங்களாகப் பெய்த கடும் மழை காரணமாக யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளில் இருக்க முடியாமல் வெள்ளம் புகுந்ததனால், 23, 000 பேர் 125 நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
மன்னாருக்கான பிரதான வீதி, முள்ளியவளையில் இருந்து முல்லைத்தீவு நகருக்குச் செல்லும் பிரதான வீதி, ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்புக்குச் செல்லும் வீதி என்பன வெள்ளத்தினால் மூழ்கியிருப்பதனால் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
மன்னார் வீதீயில் தம்பனைக்குளம் கிராமப் பகுதியிலும், முல்லைத்தீவு நகருக்கான வீதியில் வற்றாப்பளை சந்திக்கருகிலும் 5 அடி வரையிலான வெள்ள நீர் பாய்வதனால், இவ்விடத்தைக் கடந்து செல்வதற்காகக் கடற்படையினரின் உதவியோடு படகுச்சேவை நடத்தப்படுகின்றது.
இதன் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மன்னார் தீவு வியாழக்கிழமை பெய்த கடும் மழையினால் 2 அடிக்கு வெள்ளம் நிறைந்து நின்றதாகவும், இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
வவுனியா மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கிராமிய வீதிகள் பலவும் வெள்ளம் காரணமாகத் துண்டிக்கப்பட்டு பொதுமக்களின் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் சென்று பார்த்துள்ளார்.
No comments:
Post a Comment