
இலங்கையில் மழை வெள்ளத்தினாலும் மண் சரிவுகளினாலும் ஏற்பட்ட மரணங்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் எண்ணிக்கையும் மேலும் உயர்ந்துள்ளன.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என்று நாட்டின் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.
பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 75 ஆயிரம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மழை வெள்ளத்தினால் மண் சரிவுகள் ஏற்பட்ட மத்திய மாகாணத்திலேயே கூடுதலான உயிரிழப்புகளும் ஆட்கள் காணாமல் போன சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
மாத்தளை மாவட்டத்தில் மட்டும் 9பேர் உயிழந்துள்ளனர். அங்கு காணாமல் போன 7 பேர் தொடர்பில் இன்னும் தகவல்கள் இல்லை. கண்டி மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகிறது.
கிழக்கு மாகாணத்திலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கும் 5 பேரை காணவில்லை.
இதற்கிடையில் கடல் கொந்தளிப்பு மற்றும் வழமைக்கு மாறான கால நிலையிலும் கூட கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியா நோக்கிய சட்ட விரோத பயண முயற்சிகள் தொடர்கின்றன.

No comments:
Post a Comment