
சீனாவின் தென்பகுதியிலுள்ள ஹைனான் தீவுவைச் சுற்றியுள்ள சீனாவுக்குச் சொந்தமான கடல்பரப்பில் அத்துமீறி நுழையும் கப்பல்கள் எனத் தாங்கள் கருதும் கப்பல்களுக்குள் சீன பொலிசார் நுழைய இந்த புதிய விதிமுறைகள் அதிகாரம் வழங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் புதிய விதிகள் கொண்டுவருகின்ற மாற்றங்கள் என்ன என்பதை சீனா உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது. ஒரு காலத்தில் அமைதிகரமான கடல் பகுதியாக தென் சீனக் கடல்பரப்பில் வெவ்வேறு நாடுகளுக்கிடையே உருவாகியுள்ள உரிமைப் பிரச்சினைகள் பதற்றங்களை அதிகரித்துள்ளதாகக் கூறலாம்.
இப்பகுதியில் சீனா தனது இராணுவ ஆதிக்கத்தை விஸ்தரிக்க முயலுகின்ற அதேநேரத்தில் மற்ற மற்ற சிறு நாடுகள் இப்பகுதியில் தமது வான் மற்றும் கடற்படையின் வலுவைக் கூட்டி வருகின்றன.
தவிர சீனாவின் இராணுவ வல்லமையை ஈடுசெய்யும் நோக்கில் தமது சார்பாக அமெரிக்கா கரம் நீட்ட வேண்டும் என்று அந்நாடுகள் எதிர்பார்க்கின்றன. இந்த சூழ்நிலையில், அச்சுறுத்தும் ஒரு புதிய திருப்பமாக சீனாவின் இந்த புதிய விதிமுறைகள் வருகின்றன. “கப்பலுக்குள் நுழைந்து தேடும்” அதிகாரத்தை சீனா கையெடுத்துக்கொள்ள இந்த விதிமுறை வழிசெய்வதாகக் கூறப்படுகிறது.
ஹைனான் தீவின் நிர்வாகம் கொண்டுவருகின்ற மாற்றங்களாக இந்த விதிமுறைகள் முன்வைக்கப்படுகின்றன. இவை பற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் பாராசெல் தீவுகளைச் சுற்றவர அத்துமீறி மீன்பிடிக்கும் வியட்நாமிய மீன் பிடிப் படகுகளைக் கையாளத்தான் இத புதிய விதி என்று கோடிகாட்டி, ஓரளவுக்கு விளக்கம் தர சீன அரசு அதிகாரி ஒருவர் முயன்றுள்ளார்.
வரும் ஜனவரியிலிருந்து அமலுக்கு வரவுள்ள இந்த விதிமுறைகளால் எவரும் கலக்கமடையத் தேவையில்லை என்று ஆசுவாசப்படுத்த சீன அதிகாரிகள் சிலர் முயலுகின்றனர். தன்னுடைய எல்லை, தன்னுடைய அதிகார வரம்பு ஆகியவற்றை பலத்தைக் காட்டி வலியுறுத்தும் வேலையை சீனா சமீப காலமாக அடிக்கடி செய்துவருகிறது எனலாம்.
இது நடக்கின்ற அதேநேரத்தில் சீனாவின் வான் படை மற்றும் கடற்படையின் திறன்களும் வலிமையும் கணிசமான அளவில் கூட்டப்பட்டும் வருகின்றன. வரக்கூடிய புதிய விதிமுறைகள் அந்த இடத்துக்கு மட்டுமான விதிகள் என்ற அளவில் நின்றுவிடவும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் தென் சீனக் கடலில் இருந்துவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் சீனாவின் புதிய தலைமைத்துவம் எவ்விதமாக நடந்துகொள்ளப்போகிறது என்பதற்கான தடயமா இது என்பதை அவ்வட்டாரத்தில் உள்ள பல நாடுகளும் கவனமாக ஆராய்ந்துவருகின்றன.
No comments:
Post a Comment