click me

Saturday, November 3, 2012

ஆசிரியர் தகுதி மறுதேர்வு: 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி

 ஆசிரியர் தகுதி மறுதேர்வு: 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சிசென்னை,நவ.03ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதியவர்களில் மொத்தம் 3 சதவீதம் பேர்களே தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதிய 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேரில் 19,246 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை இரவே வெளியிடப்பட்டன.

தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவம்பர் 6-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

முதல் தாளை எழுதிய 2 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேரில் 10,397 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாளை எழுதிய 3 லட்சத்து 77 ஆயிரத்து 973 பேரில் 8,849 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.


முதல் தாளில் 3.7 சதவீதம் பேரும், இரண்டாம் தாளில் 2.3 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையில் ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

தமிழகம் முழுவதும் சுமார் 7,500 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதால், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைப்பது கடினம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.

அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் 20,525 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் உரிய தகுதிகளுடன் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் பணி கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment