click me

Friday, November 23, 2012

கடலூர் சிப்காட் ஆபத்தான ரசாயன ஆலைகளை மூடவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூரில் உள்ள ஆபத்தான ரசாயன ஆலைகளை மூடவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் 
கடலூர் சிப்காட் பகுதியிலுள்ள ஆர்க்கீமா பெராக்சைட்ஸ் என்ற தனியார் ரசாயன தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி அந்த ஆலையிலிருந்து ரசாயனம் பரவியதால் அப்பகுதியில் உள்ள 10-க்கும் அதிகமான கிராமங்களில் உள்ள மக்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் கடலூர் சிப்காட் பகுதியில் கெம்பிளாஸ்ட், ஆர்க்கீமா போன்ற ரசாயன தொழிற் சாலைகளை தொடங்க திட்டமிடப்பட்டபோதே, நான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தேன். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நச்சு ஆலைகளுக்கு அனுமதி அளித்தால், அப்பகுதிகளில் வாழும் மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் ஆபத்து ஏற்படலாம் என்று எச்சரித்ததுடன், பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினேன்.
ஆனால், தமிழக அரேசோ மக்களின் குரலுக்கு மதிப்பளிக்காமல், தொழிலதிபர்கள் அளித்த நிர்பந்தங்களுக்கு பணிந்து, இத்தகைய ஆலைகளுக்கு அனுமதி அளித்தது. அதன்பின் கடந்த சில ஆண்டுகளில் இப்பகுதிகளில் உள்ள தனியார் ஆலைகளில் விபத்துக்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது.
கடலூர் சிப்காட்டில் உள்ள ஆர்க்கீமா ரசாயன  லையில் ஹைட்ரோ பெராக்சைடு அமிலம் வைக்கப்பட்டிருந்த கொள்கலன் நேற்று உடைந்ததால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற அதிர்வு ஏற்பட்டிருக்கிறது.
ரசாயனக் கசிவால் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதையடுத்து பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, அருகிலுள்ள ஊர்களில் தஞ்சம் புக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
கடலூரில் உள்ள ஆலைகளில் அடிக்கடி விபத்துகளும் , உயிரிழப்புகளும் ஏற்படும் போதிலும், அவை பெரும்பாலும் வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்படுகின்றன. மறைக்க முடியாத இதுபோன்ற ஒருசில விபத்துக்கள் மட்டுமே வெளியில் தெரிகின்றன. ஆர்க்கீமா ஆலையில் பெராக்சைட் அமிலம் தீப்பிடித்தற்கு பதில் இன்னும் அதிக சக்தி வாய்ந்த ரசாயனப் பொருட்கள் ஏதேனும் வெடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவே அச்சமாக உள்ளது.
கடலூரைச் சுற்றிலும் ஆபத்தான ரசாயன ஆலைகள் நிறைய இருப்பதால் அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் வெடிக்க காத்திருக்கும் எரிமலை மீது அமர்ந்திருப்பதைப் போன்ற அச்ச உணர்வில் உள்ளனர். இப்பகுதிகளில் உள்ள ஆலைகளில் பல சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறையிடமிருந்து உரிய அனுமதிகளை பெறவில்லை என தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி,  ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பற்ற பகுதி கடலூர் சிப்காட் தான் என்று மத்திய சுற்றுச்‹ழல் துறை எச்சரித்துள்ளது. இதன்பிறகும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், போபாலில் ஏற்பட்டது போன்ற விபத்துக்கள் கடலூரில் நிகழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
எனவே, இனியாவது மத்திய மாநில அரசுகள் விழித்துக்கொண்டு, கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள ஆபத்தான ரசாயன ஆலைகளை உடனடியாக மூட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

No comments:

Post a Comment