செல்போனில் நள்ளிரவில் பேசினால் கட்டண சலுகை வழங்க கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
செல்போனில் நள்ளிரவு அழைப்பது, எஸ்எம்எஸ் அனுப்புவது, இன்டர்நெட் பயன்படுத்துவது போன்ற சேவைகளுக்கு செல்போன் நிறுவனங்கள் கட்டண சலுகை வழங்குவது உலகம் முழுவதும் நடக்கிறது.
இதை இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள் அதிகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். குறைந்த கட்டணத்தில் நள்ளிரவில் செல்போனில் மணிக்கணக்கில் பேசுகின்றனர்.
பாகிஸ்தானில் இதுபோன்ற இரவு நேர சலுகைகளால் இளைஞர்களும், இளம்பெண்களும் சீரழிந்து வருகின்றனர். இதை தடுக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் பலரும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவில் செல்போன் பயன்படுத்தும் போது கட்டண சலுகை வழங்க கூடாது என்று பாகிஸ்தான் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் தொலைதொடர்பு ஆணைய செய்தி தொடர்பாளர் மலாஹத் ராப் கூறுகையில், நள்ளிரவு கட்டண சலுகையால் செல்போன் நிறுவனங்கள் சமூகத்தில் ஆபாச நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துகிறது.
எனவே கட்டண சலுகை அளிக்க தடை விதித்துள்ளோம். இதுகுறித்து அனைத்து செல்போன் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் என்றார்.
அரசு உத்தரவை எதிர்த்து இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் செல்போன் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்று பிரபல யுபோன் நிறுவன செய்தி தொடர்பாளர் ஆமீர் பஷா தெரிவித்தார்.
No comments:
Post a Comment