click me

Monday, October 29, 2012

இன்னமும் சில மணித்தியாலயங்களில் புயல் தாக்கும்!- முல்லைத்தீவில் 4000 குடும்பங்கள் இடம்பெயர்வு


வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக இன்னும் சில மணித்தியாலயங்களில் முல்லைத்தீவு முதல் யாழ்ப்பாணம் வரையிலான பகுதிகளை புயல் தாக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 

தற்போது முல்லைத்தீவுக்கு வெளியே 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ள இத் தாழமுக்கம் புயலாக மாறி தற்போது வடக்கு பகுதி நோக்கி நகர்ந்து வருவதாகவும், இது இன்று மாலை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களை தாக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இப்புயலானது மணிக்கு 60 முதல் 80 வரையான வேகத்தில் இப்பகுதிகளை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை இன்று காலை ஏற்பட்ட கடும்காற்று காரணமாக கடற்றொழிலாளர்களின் படகுகள் சில சேதமடைந்தள்ளதாக தெரியவருகின்றது. 

யாழ்.மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்களை கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. 

கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள யாழ். அலுவலகமும் கடற்றொழிலாளர்களை கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளது. 

அத்தோடு யாழ்ப்பாணம் முழுவதிலும் கடுமையான இருளில் மூழ்கியுள்ளதோடு வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் கடும் காற்றும் வீசி வருகின்றது. 

இதேவேளை சுனாமி ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக வட பகுதியின் கரையோரங்களிலுள்ள மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



முல்லைத்தீவில் 4 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்வு 

முல்லைத்தீவில் பெய்த கடும் மழைக் காரணமாக ஒட்டிச்சுட்டானைச் சேர்ந்த 4000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

முல்லைத்தீவு கடற்கரையின் கிழக்கு பகுதியில் சுமார் 250 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் கடுமையான மழை பெய்து வருகிறது. 

முல்லைத்தீவில் பெய்த மழையினால் ஒட்டிச்சுட்டான் முல்லைத்தீவு வீதி வெள்ள நீரினால் மூழ்கியுள்ளது. இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. 

ஒட்டிச்சுட்டானில் இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நுவரெலியாவில் 48 வீடுகளுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறைந்தது 11 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. 

நாட்டில் தற்போது நிலவுகின்ற மோசமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதனால் மக்கள் விழிப்பாக இருக்கமாறும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment