
இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழையும், உள் மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரம் அடைந்து இன்று புயலாக மாறுகிறது. இதற்கு நீலம் என பெயரிடப்பட்டு உள்ளது.
தற்போது தென்கிழக்கு வங்கக் கடலில் சென்னையில் இருந்து 500 கி.மீ. தொலைவிலும், இலங்கையின் திரிகோண மலையில் இருந்து 130 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. அது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
நாளை மாலை அல்லது இரவில் நாகப்பட்டினத்துக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே திசையில் புயல் நகர்ந்து வந்தால் சென்னையை தாக்கும் அபாயம் உள்ளது.
தற்போது மணிக்கு 60 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. காற்று வீசும் திசை மாறினால் கடலூர் அல்லது வடதமிழ்நாட்டை புயல் தாக்கும். புயல் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டுகிறது.
நாகை, ராமேசுவரம் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், எண்ணூர், புதுவை, கடலூர் மாவட்டங்களில் தீவிர புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. சூறாவளி காற்றுடன் மழை பெய்வதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அலைகள் பல மீட்டர் தூரத்துக்கு எழுந்து கரையை தாக்குகிறது.
மீனவர்கள் இன்று 3-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுவை, காரைக்காலிலும் இன்று விடுமுறை விடப்பட்டது.
சென்னை நகரில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எண்ணூர், திருவொற்றியூர் பகுதியில் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடலோரப் பகுதியில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடலூரில் நேற்று இரவு 8 மணி அளவில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுவை, கடலூர், சிதம்பரம், மரக்காணம் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் சின்ன முதலியார் சாவடி, கோட்டக்குப்பம் பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதில் சில வீடுகள் இடிந்து விழுந்தன. புயல் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
போலீசார், தீயணைப்பு படையினர் வருவாய்த்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். புயல் மழையை தொடர்ந்து கடலூர், விழுப்புரம், புதுவையில் அரசு சார்பில் இலவச டெலிபோன் வசதியுடன் கூடிய வெள்ளசேத தடுப்பு கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு மீட்பு குழுவினரும், வருவாய் துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந்தேதி வங்க கடலில் உருவான தானே புயல் கடலூர் மாவட்டத்தை தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தியது. ஏராளமான வீடுகள், மரங்கள், பயிர்கள் சேதம் அடைந்தது. தானே புயல் உருவான இடத்தில் தான் தற்போதைய நீலம் புயலும் உருவாகி வந்து கொண்டு இருக்கிறது.
தானே புயல் தாக்கிய போது பலத்த காற்று வீசியது. அதுபோல் நீலம் புயல் காரணமாக இப்போதும் பலத்த காற்று வீசுகிறது. காற்று வீசும் திசையைப் பொறுத்து புயல் கரையை கடக்கும். நீலம் புயலானது இந்த ஆண்டில் உருவான முதலாவது புயல் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment