click me

Monday, October 29, 2012

இலங்கையில் கடுமையான மழை


இலங்கையின் வடபகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாக்கத்தையடுத்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. காற்று மழையுடன் கூடிய சீரற்ற காலை நிலை காரணமாக வடக்கு மற்றும் ஏனைய பகுதி மீனவர்கள் கடலுக்குத் தொழிலுக்குச் செல்லவில்லை.
தாழமுக்கம் காரணமாக கடலிலும் காற்றுவீசும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசாங்கம் ஏற்கனவே, அறிவித்திருக்கின்றது.

இன்று மதியம் வரையிலான 24 மணிநேர காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வடபகுதியில் இடியுடன் கூடிய அதிகூடிய மழை வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளதாக கால நிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

காற்றுடன் கூடிய அடை மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.
ஆவணப்படம்பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு கூரை விரிப்புகள் தரைவிரிப்புக்கள் பொன்றவற்றைத் தருமாறு கோரியிருப்பதாகவும், அவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் மந்துவில், ஆனந்தபுரம், மல்லிகைத்தீவு போன்ற பகுதிகளில் தகரக் கூரைகளைக் கொண்டிருந்த தற்காலிக வீடுகளின் தகரங்ள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடாரங்களும் பல இடங்களில் காற்றினால் அள்ளிச் செல்லப்பட்டுள்ளது. இனதால் பல குடும்பங்கள் மழையினால் நனைந்து பெரும் சிரமங்களுக்கு உள்ளாக நேர்ந்துள்ளது. வீடுகளின் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 


மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அருகில் உள்ள பாடசாலைகளில் சென்று தங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு தங்குபவர்களுக்கு நிவாரணமாக உணவு வழங்குவதற்குரிய ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கடலோரப் பகுதிகளில் வழமைக்கு மாறாக அதிக காற்று வீசுவதாகவும், நிலைமைகளைத் தாங்கள் அவதானித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை நாட்டின் தென்பகுதியிலும் பல இடங்களில் கடுமையான மழை பெய்து வருகின்றது. வடமத்திய மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது நிலைமை தலைகீழாக மாறி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக எமது கொழும்புச் செய்தியாளர் கூறுகிறார்.

No comments:

Post a Comment