
51 வயதான அவர் தற்போது கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் அவரது புகழ் இன்னும் குறையவில்லை. உலகமெங்கும் தற்போதும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
இந்தியாவில் அதிலும் கேரளாவில் மரடோனாவிற்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள ஒரு நகை கடை திறப்பு விழாவிற்கு மரடோனா வந்திருந்தார். கடந்த 23ம் திகதி விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய, மரடோனாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின்பு தனி விமானம் மூலம் கொச்சியில் இருந்து கண்ணூர் சென்றார். கேரள கால்பந்து ரசிகர்களை தனது அற்புதமான ஆட்டத்தால் கட்டி போட்டிருந்த மரடோனாவிற்கு வழி நெடுக்கிலும் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
கண்ணூர் நகராட்சி ஜவஹர் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாரடோனா, ரசிகர்களின் முன்னிலையில் தோன்றினார்.
அவர் மைதானத்திற்குள் நுழைந்தது முதல் ரசிகர்களின் கைதட்டல் விண்ணை பிளந்தது. சுமார் 50 ஆயிரம் பேர் அமர வசதி கொண்ட மைதானம் ரசிகர்களை கொண்டு நிரம்பி வழிந்தது.
இதில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் என்ற மரடோனாவின் தீவிர ரசிகரும் வந்திருந்தார். 38 வயதான இவர் தனது வீடு முழுவதும் மரடோனா படங்களை ஒட்டி வைத்துள்ளார். இவரை அப்பகுதியினர் மரடோனா சுபாஷ் என்றே அழைத்து வந்தனர்.
விழாவில் மரடோனா ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். அதை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். மகிழ்ச்சியில் சுபாஷ் துள்ளி குதித்தார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
இவருக்கு லிஜி என்ற மனைவியும், ஸ்ரீநந்த் என்ற மகனும் உள்ளனர். மரடோனாவை பார்த்த மகிழ்ச்சியில் சுபாஷ் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



No comments:
Post a Comment