தமிழ் நாட்டை பெருமளவில் பாதித்திருக்கும் மின்வெட்டை சமாளிக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறுகிறது.
இன்று டில்லி மாநில அரசு பயன்படுத்தாது விட்ட 1700 மெகாவாட் மின்சாரத்தைத் தமிழகத்துக்கு ஒதுக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு கோரியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்தியத் தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மாநிலத்தில் நிலவும் கடும் மின்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, டில்லி அரசு மத்திய அரசிடம் ஒப்படைக்க உத்தேசித்துள்ள மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என தனது கடிதத்தில் ஜெயலலிதா கோருகிறார்.தமிழகத்தில் மின் நிலை பற்றி விளக்கி முதல்வர், மாநிலத்தின் மின்பற்றாக்குறை 4 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது எனவும், தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால், மின் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது, ஆனால் தொழில்நுட்பக் காரணங்களால் தமிழகத்தால் தென்பகுதிகளில் இருந்தும் மின்சாரம் பெற இயலாத நிலை நிலவுவதாகக் கூறுகிறார். இதனால் பல்வேறு வகையில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது, இதன் விளைவாய் உணவு உற்பத்தி வீழ்ச்சியடையக்கூடும் எனவும் அவர் அச்சம் தெரிவித்திருக்கிறார்.
இந் நிலையில், டில்லி அரசு எதிர் வரும் நவம்பர் 1ம் நாள் முதல் 2013ம் ஆண்டு மார்ச் 31 வரை, தங்கள் மின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தங்களுக்குத் தேவையில்லை என்பதால் அதனை மத்திய அரசிடமே ஒப்படைக்கவிருப்பதாகவும், அவ்வாறு திருப்பித் தரப்படுவதை முழுமையாக தமிழகத்திற்குத் தந்துதவவேண்டும், எப்படியும் முன்பே தமிழகத்தால் கோரப்பட்டிருப்பதுபோன்று கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் தம்மாநிலத்திற்கு கிடைக்கும் வகையில் மின்சார சேவை கட்டமைப்புகளை மாற்றி அமைக்கவும் பிரதமர் உத்தரவிடவேண்டுமென என தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வேண்டிக்கொண்டிருக்கிறார்.
'வடக்கு-தெற்கு மின்பாதை இல்லை'
இந்த 1700 மெகாவாட் மின்சாரம் கிடைத்தால் தமிழக மின்பற்றாக்குறை ஓரளவு நீங்கும் ஆனால், இந்த மின்சாரம் தமிழ்நாட்டுக்கு வருவதற்கான , மின்பாதை இல்லாத நிலையில், இந்த மின்சாரம் தமிழ்நாட்டுக்கு வருவது சாத்தியமில்லை என்று , தமிழ்நாடு மின்பொறியாளர் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.காந்தி தமிழோசையிடம் கூறினார்.
தெற்கு மண்டலம் மட்டும் இருவழிமின்சார (டி.சி) மின் பாதைகளாக இருக்கிறது. நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தென்மாநில மின் தொகுப்பிற்கு மின்சாரம் வழங்கப்படவேண்டுமானால் இந்த பாதை வேறுபாடு சரி செய்யப்பட்டால்தான் அது முடியும் என்ற நிலையில், அதை ஏன் இந்திய அரசால் செய்ய முடியவில்லை என்று கேட்டதற்கு, இது ஒரு கொள்கை முடிவு, மேலும், இது பெரும் பொருட்செலவு ஏற்படக்கூடிய ஒரு திட்டம் என்றார் காந்தி.
வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்டால், அணைக்கட்டுகளில் நீர்வரத்து மேம்பட்டு, நீர்மின்சக்தி பெருகும், அதன் காரணமாக மின்சார வெட்டு தளரும் என்று கூறப்பட்டது, வடகிழக்கு பருவ மழை தொடங்கி ஒரு வார காலம் ஆகிய நிலையில், இந்த நீர் மின்சக்தி உற்பத்தி எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு, நீர் மின்சக்தி மட்டும் மின்சார வெட்டை பெருமளவு தளர்த்தி விடாது. ஏனென்றால் மொத்த மின் உற்பத்தியில் நீர் மின்சக்தியின் பங்கு என்பது சிறிய அளவுதான் என்றார் காந்தி.
No comments:
Post a Comment