
அது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் திமுக தலைவர் கருணாநிதி தி.மு. க உள்ளிட்ட கட்சிகள் வாதாடிப் பெற்ற திட்டம் நிறைவேற்றப்பட்டால் அக்கட்சிகளுக்கு நற்பெயர் கிடைத்துவிடும் என்பதாலேயே முதல்வர் முட்டுக்கட்டை போடுவதாகக் குறைகூறியிருக்கிறார்.சேது சமுத்திரத்திட்டத்தின் விளைவாய் தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய நிலையிலே உள்ள தென்மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வு வளம்பெறுமென்பதால்தான் அத்திட்டம் உருவாக்கப்ப்ட்டது என்கிறார் கருணாநிதி.
2001ஆம் ஆண்டு அ இஅதிமுக தேர்தல் அறிக்கையில் கூட சேது சமுத்திரத்திட்டம் வேண்டும் என வாதிடப்பட்டிருக்கிறது. ஆனால் அ இஅதிமுக அரசு இப்போது இன்று திடீரென்று ராமர் பாலம் என்றும், அதனை பாரம்பரியம் மிக்க புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டுமென்றும் கூறுவது எப்படி என்றும் வினவுகிறார் திமுக தலைவர்.
எவ்வாறு கூடங்குளம் அனல் மின் நிலையத் திட்டம் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிறகு, திடீரென்று அந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று அமைச்சரவையிலே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் முதல்வர் ஜெயலலிதா அனுப்பிவைத்தாரோ அதைப் போலவே இப்போதும் சேது சமுத்திரத் திட்டத்திற்காக பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்பட்ட பிறகு திடீரென்று அத் திட்டமே தேவையில்லை என்று அந்தப் பகுதி மக்களையெல்லாம் பாதிக்கக் கூடிய அளவிற்கு முடிவெடுத்திருப்பதாகவும் கருணாநிதி மேலும் குற்றஞ்சாட்டுகிறார்.
சேது சமுத்திர திட்ட சுற்றுச் சூழல் கண்காணிப்புக் குழு தலைவர் டாக்டர் எஸ். கண்ணையன், 2007ஆம் ஆண்டு ஏப்ரலில் செய்தியாளர்களுக்கு அளித்த ஒரு பேட்டியில், ராமர் பாலம் என்றழைக்கப்படும் ஆதாம் பாலத்தின் 70 இடங்களில் 20 மீட்டர் ஆழத்துக்கு பாறை மாதிரிகளை ஜியோ கெமிக்கல் முறையில் சோதனை செய்தோம். அதில், கடலில் உள்ள படிமங்கள் தான் உள்ளன. அறிவியல் ரீதியாக ராமர் பாலத்தை எவரும் உருவாக்கியதற்கான எந்த அடையாளங்களும் இல்லை. பாலம் இருக்கும் இடத்திற்குப் பதிலாக வேறு இடத்தில் கால்வாயைத் தோண்டினால், மன்னார் வளைகுடா பகுதியில் இருக்கும் 26 தீவுகளும் அழிந்து விடும் வாய்ப்பு அதிகம்” என்று தெரிவித்ததையும் கருணாநிதி நினைவுகூர்ந்திருக்கிறார்.
அறிவியல் ரீதியாகவோ, ஆழ்கடல் வேதியியல் பகுப்பாய்வு மூலமாகவோ மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலம் எதுவும் அங்கே இருந்ததற்கான எவ்வித அடிப்படையோ, ஆதாரமோ கிடையாது என்பதுதான் உண்மை. பன்னெடுங்காலமாகப் பேசப்பட்டுவந்த,தமிழகத்தை வாழ வைக்கப் போகும் பிரமாண்டமான திட்டத்திற்கு முடிவு கட்ட முயல்வது தமிழகத்திற்குச் செய்யும் துரோகம் எனவும் தனது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவை சாடியிருக்கிறார்.
No comments:
Post a Comment