click me

Monday, October 29, 2012

அரசு கல்லூரி மாணவர்களின் வன்முறைக்கு காரணம் என்ன?

அரசு கல்லூரி மாணவர்களைப் பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு என்று என்று அச்சப்படுகின்றனர் பொதுமக்கள் தரப்பினர். அந்த பயம் இருக்கணும்! அதைத்தான்
நாங்கள் விரும்புகிறோம் என்கிறது மாணவர் தரப்பு.
நீயா? நானா?: அரசு கல்லூரிஇது ஞாயிறன்று ஒளிபரப்பான நீயா? நானா? நிகழ்ச்சியின் சூடான விவாதம்.
அரசு கல்லூரி மாணவர்களின் வன்முறை அதிகமாகிவிட்டது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. ஆனால் நாங்கள் படிக்கிற காலத்தில்தான் இதை எல்லாம் செய்யமுடியும். அதை பொதுமக்கள் பெரிது படுத்துகின்றனர் என்று கூறினர் மாணவர் தரப்பினர். கல்லூரி நடத்தும் தலைவர்கள் சரியாக இல்லை. அதனால் மாணவர்களும் அப்படித்தான் இருக்கின்றனர். எங்களுக்கு சரியான ரோல் மாடல் இல்லை என்பதும் மாணவர் தரப்பினர் வாதம். அடிப்பவன்தான் ஹீரோ அதேபோல் மாணவர்களுக்கு வயலன்ஸ்தான் பிடிக்கிறது. அதுவும் இன்றைய வன்முறைக்கு காரணமாக இருக்கிறது என்றார் ஒரு மாணவர்.
பஸ் டே கொண்டாடுவதன் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வன்முறையாளர்களாக மாறிவருகின்றனர் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.

இந்த விவாத நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர் ஞானி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் பங்கேற்று அரசு கல்லூரி மாணவர்கள் பற்றிய தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர்.
4 ஆயிரம் பேர் படிக்கும் கல்லூரியில் 400 பேர்தான் ரவுடித்தனம் செய்கின்றனர். மீதி 3500 பேர் நன்றாக படிக்கும் மாணவர்கள். எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் எந்திரங்களாக உருவாகிவருகின்றனர். மருத்துவம் படித்தவர்கள் கமிஷன் வாங்குகின்றனர். பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதற்காக படிக்கும் படிப்புகள் அவை. ஆனால் அரசு கல்லூரி மாணவர்கள் மதிப்பெண்களுக்காக படிக்கவேண்டியதில்லை என்றார் எழுத்தாளர் ஞானி.
நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஊடகங்களில் வரும் வன்முறைக் காட்சிகளும், காதல் காட்சிகளும் இன்றைக்கு மாணவர்களை மாற்றியிருப்பதாக கூறினார். நாங்கள் படித்த காலத்திலும் அரசியல் இருந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டம், எமர்ஜன்சி இருந்தது உயரிய சிந்தனைகள் கொண்ட பெற்றோர்களால் வளர்க்கப்பட்டோம். ஆனால் இன்றைக்கு மதிப்பெண்களை மட்டுமே பெற்றோர்கள் இலக்காக நினைக்கின்றனர். மாணவர்களிடையே உயர்ந்த இலக்கை பெற்றோர்கள் நிர்ணயிக்கத் தவறிவிட்டனர் என்றார் இளங்கோவன் உளவியல் ரீதியான சிக்கல்களே மாணவர்களுக்கு இடையே வன்முறை ஏற்பட காரணமாக அமைகிறது என்றும் அவர் கூறினார்.
அரசுக்கல்லூரி வன்முறைக் களமாக மாறுவதற்கு இன்றைக்கு மூன்று காரணங்களை முன்வைத்தார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன். பாலியல் சார்ந்த கவர்ச்சி, அரசியல், ஜாதிய உணர்வு. தான் படித்த காலத்தில் அந்த காலத்தில் அழகு தேவதைகள் நடமாடிய இடமாக பிரசிடென்ஸி கல்லூரி இருந்தது என்று தமிழருவி மணியன் கூறினார். மாணவர் கல்லூரி மீது மற்ற கல்லூரி மாணவர்களுக்கு தனி பார்வை இருந்தது. ஆனால் அதே கல்லூரி இன்றைக்கு அப்படி இல்லை. தனது கல்லூரி மாணவியை வேறு கல்லூரி மாணவன் காதலிப்பதை விரும்புவதில்லை. அதனால் இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் உருவாகிறது என்றார்.
அரசியல், மாணவர் தேர்தல் நடக்கும் போது மோதிக்கொள்வார்கள். இன்றைக்கு இருக்கிற அரசியல் சரியில்லை. வெளி ஆட்கள் மாணவர்கள் போர்வையில் கல்லூரிக்குள் சென்று வன்முறையில் ஈடுபடுகின்றனர். மூன்றாவது பிரச்சினை ஜாதி. எங்கள் காலத்தில் சாதி மோதல் கிடையாது. ஆனால் இன்றைக்கு சட்டக்கல்லூரியோ, அரசுக் கல்லூரியோ இரண்டு சாதிகள் பிரச்சினையை உருவாக்குகின்றன என்று ஆதங்கப்பட்டார் தமிழருவி மணியன்.
அடித்தட்டு மக்களின் உறைவிடம்தான் கலைக்கல்லூரிகள். வறுமையில் இருப்பவர்கள்தான் படிக்கின்றனர். ஏழைகளும், ஒடுக்கப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும்தான் இன்றைக்கு அரசு கல்லூரியில் படிக்கின்றனர். இலவசமாக கல்வி கொடுக்கிறோம் என்று கூறி தரமற்ற கல்வியாக தருகின்றனர் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் தமிழருவி மணியன்.
3 ஆயிரம் பேர் படிக்கும் இடத்தில் 50 மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்பதால் அந்த கல்லூரி மாணவர்கள் அனைவரின் மீதும் ஒரே மாதிரியான பார்வையை செலுத்தவேண்டிய அவசியமில்லை என்று உணர்வு பூர்வமான கூறினார் தமிழருவி மணியன்.
ஊடகங்கள் உங்களின் பிரச்சினைகளைக் காட்டுகின்றன. எங்களின் கல்லூரியில் மிகச்சிறந்த சாதனைகளையும் செய்திருக்கிறோம் என்று கூறினர் மாணவர்கள்.
மாணவப்பருவத்தில் வன்முறை மட்டுமே ஹீரோயிசம் இல்லை... வன்முறை ஒருநாளும் வழியாகாது... என்று கூறி விவாதத்தை இனிதே முடித்தார் நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத்.

No comments:

Post a Comment