
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளுர் மாவட்டத்தில் இன்று அதிகாலை தொடங்கிய மழை கனமழையாக கொட்டுகிறது. புயல் சின்னம் காரணமாக சென்னையில் கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படுகிறது. பல அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுகின்றன.
திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் உள்ளது. கடல் அரிப்பை தடுக்க கொட்டப்பட்டிருந்த கற்களையும் தாண்டி சாலையில் கடல் நீர் விழுகிறது. தரைக்காற்றும் வேகமாக வீசுகிறது. மழையும் பெய்து வருவதால் காற்று ஜில்லென உள்ளது.
இதனால் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், பெரியகுப்பம் உள்ளிட்ட 24 மீனவ கிராமத்தினர் இன்று காலை பைபர் மற்றும் கட்டுமரங்களில் மீன் பிடிக்க செல்லவில்லை. 500-க்கும் மேற்பட்ட படகுகளை அவர்கள் பாதுகாப்பான இடங்களில் கட்டி வைத்துள்ளனர்.
பலத்த மழை காரணமாக கலைஞர் நகர், கார்கில் நகர் பகுதியில் வெள்ள நீர் தேங்கி உள்ளது. ரோடு அகலப்படுத்தும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருவதால் பல இடங்களில் மின் வயர்கள் வெளியில் உள்ளன. இதையடுத்து எல்லையம்மன் நகர், பெரியார் நகர் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னத்தையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. சுமார் 1500 விசைப் படகுகளும், 1000 பைபர், கட்டுமரங்களும் கடலுக்குள் செல்லவில்லை. அவை பாதுகாப்பாக கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
பட்டினப்பாக்கம், மெரீனா பகுதியில் கடல் அலை சீற்றமாக இருந்தது. கோவளம், மாமல்லபுரம், கானாத்தூர், நெம்மேலி, செம்மஞ்சேரி, கடலிலும் அலை அதிக சீற்றத்துடன் இருந்ததால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. தொடர்ந்து 3-வது நாளாக மீனவர் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியாததால் கவலை அடைந்துள்ளனர்.
புயல் தீவிரமடைந்துள்ளதையடுத்து சென்னை துறைமுகத்தில் 7-ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment