click me

Tuesday, August 21, 2012

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற தென் ஆப்பிரிக்கா, டெஸ்ட் போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.


லார்ட்ஸ்: இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 309 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஆடி 315 ரன்களை எடுத்தது. 2வது இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 351 ரன்களை குவித்தது. 4வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2வது இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து 2 விக்கெட்களை இழந்து 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
3வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். ஆனால் பேர்ஸ்டவ், டிராட் ஆகியோர் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தனர்.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பிரையர் 73 ரன்கள் எடுத்த வெளியேறினார். இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 294 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. மேலும் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம், டெஸ்ட் தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. முன்னதாக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து அணி, 117 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு சரிந்தது.
ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், பாகிஸ்தான் 109 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், இந்தியா(104) 5வது இடத்திலும் உள்ளன. அதன்பிறகு இலங்கை(98), மேற்கிந்திய தீவுகள்(90), நியூசிலாந்து(80) ஆகிய அணிகள் வரிசையாக இடம் பெற்றுள்ளன.
இது குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் சுமித் கூறியதாவது,
இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் சிறப்பாக இருந்தது. இரு அணிகளும் சிறப்பாக ஆடின. இங்கிலாந்து அணியை வீழ்த்த நாங்கள் மிகவும் போராடினோம். டெஸ்ட் தொடரை வென்று, தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

No comments:

Post a Comment