click me

Monday, August 20, 2012

மெகந்தி பூசிய பெண்களுக்கு அலர்ஜி ஏற்பட்டதாக வதந்தி: வேலூர் மாவட்டத்தை உலுக்கியது

மருதாணி, மெகந்தி பூசிய பெண்களுக்கு அலர்ஜி ஏற்பட்டதாக வதந்தி: வேலூர் மாவட்டத்தை உலுக்கியதுவேலூர், ஆக.20-   

ஆந்திர மாநிலம் பலமனேர், சித்தூர் மற்றும் பெங்களூர் பங்காருபேட்டை, சேலம், கிருஷ்ணகிரி பகுதியில் மருதாணி, மெகந்தி வைத்தவர்களுக்கு அரிப்பு மற்றும் வாந்தி ஏற்பட்டு இறந்து விட்டதாகவும் வதந்தி பரவியது. 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம் பகுதியில் இந்த தகவல் வேகமாக பரவியது. இதனால் ரம்ஜான் பண்டிகைக்கு மெகந்தி, மருதாணி வைத்தவர்கள் கடும் பீதியடைந்தனர். பெண்கள் குழந்தைகளுடன் கூட்டம் கூட்டமாக ஆஸ்பத்திரிகளுக்கு சென்றனர். 


வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் இருந்த ஏராளமானோர் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இரவு 1.30 மணிக்கு கூட்டம் அதிகமானது. அப்போது ஆஸ்பத்திரியில் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே இருந்தார். இதனால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அனைவருக்கும் விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர். 

ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகமான தகவலறிந்ததும் டி.எஸ்.பி. மாதவன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அப்போது சிலர் போலீசார் மீது கல்வீசினர். 

போலீசார் பொதுமக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஆஸ்பத்திரியில் நிறுத்தியிருந்த 2 தனியார் ஆம்புலன்சு கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. ஆஸ்பத்திரி வளாகத்தில் கடும் பதட்டம் ஏற்பட்டது. இந்த மோதலில் பாத்திமா(வயது52) என்ற பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். 

போலீஸ் தயடிடிக்கு பின்னர் சிகிச்சை தொடர்ந்து நடந்தது. திருப்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ஷில்பா பிரபாகர் அதிகாலை 3.30 மணிக்கு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். உடன் தாசில்தார் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் வதந்தி குறித்து விளக்கம் அளித்தனர். 

இந்த சம்பவத்தையடுத்து வாணியம்பாடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் மருதாணி, மெகந்தி பூசிய 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற இரவு 12 மணிக்கு மேல் வந்தனர். அப்போது ஒரே ஒரு டாக்டர் வந்தார். 

சிகிச்சைக்கு தாமதமானதால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள 3 கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. 

குடியாத்தம் சித்தூர்பேட்டை பகுதியில் வதந்தி பரவியதால் ஆயிரக்கணக்கானோர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். ஆஸ்பத்திரியில் 10 டாக்டர்கள் மூலமாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். 

குடியாத்தம் எம்.எல்.ஏ. லிங்கமுத்து, சேர்மன் அமுதா, தாசில்தார் லிங்கமுத்து ஆகியோர் இரவு ஆஸ்பத்திரிக்கு சென்று பொதுமக்களிடம் வதந்தி குறித்து நம்ப வேண்டாம். இதனால் பாதிப்பு எல்லை எனக் கூறி விளக்கம் அளித்தனர். இதேபோல பேரணாம்பட்டு பகுதியிலும் வதந்தி பரவியது. 

வேலூரில் இரவு 10 மணிக்கு மருதாணி, மெகந்தி குறித்த வதந்தி பரவியது. சுமார் 50க்கும் மேற்பட்டோர் வேலுர் பழைய அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்றனர். திருவண்ணாமலையிலும் வதந்தி பரவியதையடுத்து அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் 500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்றனர்.

No comments:

Post a Comment