டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தில் உற்பத்தித் துறை மற்றும் நிதிச் சேவைகள் துறையை தூக்கி சாப்பிட உள்ளது விவசாயத்துறை.
இந்தியாவில் 80 சதவீத மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலிலேயே ஈடுபட்டு வந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தில் அதன் பங்கு மூன்றாவது இடத்திலேயே உள்ளது. முதலிடத்தை உற்பத்தித்துறையும் இரண்டாவது இடத்தை நிதிச் சேவைகள் துறை எனப்படும் financial services தான் பிடித்துள்ளன.
இந்த நிலைமை அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாறப் போகிறது.
விவசாயப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதையடுத்து, அடுத்த இரு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தில் முதலிடத்தை விவசாயத்துறை பிடிக்கவுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் (GDP) இப்போது 15.3 சதவீத பங்குடன் முதலிடத்தில் உள்ள உற்பத்தித்துறை (manufacturing sector) அடுத்த இரண்டு ஆண்டுகளில் 13.9 சதவீத பங்குடன் இரண்டாவது இடத்துக்குப் போய்விடும்.
இப்போது 14 சதவீத பங்குடன் இரண்டாவது இடத்தில் உள்ள விவசாயத்துறை அடுத்த இரு ஆண்டுகளில் 17.3% பங்குடன் முதலிடத்தைப் பிடிக்கவுள்ளது. விவசாயத்துறையில் மீன்வளமும், பால்வளம் உள்ளிட்டவையும் அடங்கும்.
உணவு தானியங்களைவிட விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழங்கள், காய்கறிகள், பால், முட்டை, கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகளின் விலைகள் பெருமளவில் உயர்ந்துவிட்டதால் விவசாயிகளின் வருமானமும் விவசாயத்துறையின் வருமானமும் அதிவேகமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பேசியது சரிதான்:
நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய எஃகுத்துறை அமைச்சர் பேணிபிரசாத் வர்மா, நாட்டில் விலைவாசி உயர்வது நல்லது தான். இதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது, அவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது என்றார்.
அமைச்சரின் விலைவாசி உயர்வு பேச்சை மிகக் கடுமையாக கண்டித்து வருகின்றன ஊடகங்களும் எதிர்க் கட்சியான பாஜகவும்.
ஆனால், உண்மை நிலவரத்தையே அவர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கிராமப் பகுதிகளில் இந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நுகர்வோர் பொருள்கள் உற்பத்தியாளர்களின் விற்பனை கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிராமப் பகுதிகளில் வாங்கும் திறன் நகர்ப் பகுதிகளை விட அதிகரித்து வருகிறது.
No comments:
Post a Comment