தமிழகத்தின் சிறப்பு தடுப்பு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரையும் விடுவித்து வேறு திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பவேண்டும் என்று வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர் செந்தூரனுக்கு ஆதரவு தெரிவித்து மதிமுகவும் உண்ணாவிரதம் அறிவித்துள்ளது.செங்கல்பட்டு மற்றும் பூவிருந்த வல்லி சிறப்பு முகாம்களில் 47 இலங்கைத் தமிழர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு முகாம்கள் ஏறத்தாழ சிறைக்கூடங்களாக செயல்படும் நிலையில், குற்றங்கள் புரியாத தாங்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமெனக்கோரி கடந்த 21 நாட்களாக செந்தூரன் உண்ணாநோன்பு மேற்கொண்டுவந்தார்.
கடந்த 7 நாட்களாக நீர் அருந்துவதையும் நிறுத்தியிருந்த அவர் தற்போது அதிகாரிகளால் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு குழாய்கள் வழியாக அவருக்கு வலுக்கட்டாயமாக உணவு செலுத்தப்பட்டுவருகிறது.
அவரை சந்தித்தபின் அறிக்கை வெளியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ செந்தூரனின் உடல்நிலை மோசமடைந்திருக்கிறது, போராட்டத்தைக் கைவிடுமாறு வற்புறுத்தியும் அவர் மறுத்துவிட்டார் என்று கூறினார்.
இந்நிலையில் அவரது உயிர் காப்பாற்றப்படவேண்டும் என்றும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும் என்றும் வலியுறுத்தி தாமும் மதிமுக தலைமையகத்திலேயே தொடர் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக வைகோ கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment