click me

Saturday, August 25, 2012

சிரியாவில் தாக்குதல் தீவிரம்: 27 லட்ச மக்கள் வெளியேற்றம்

சிரியாவின் பெரிய நகரான அலெப்போ நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மீதும் இராணுவம் நடத்திய கடும் தாக்குதல்களில் ஏராளமான வீடுகள் சேதமடைந்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இராணுவத்துக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
அலெப்போ நகரில் போராட்டக்காரர்களுக்கு ஆயுதங்களை கொண்டு செல்லும் வழிகளைத் துண்டிப்பதற்காக இராணுவம் கடும் தாக்குதலை நடத்தியது.
இந்த நகரில் வசித்து வந்த சுமார் 27 லட்சம் மக்கள் தாக்குதல்கள் காரணமாக வெளியேறி விட்டதால் அங்கு சிதைந்த கட்டடங்களே தென்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலெப்போ நகரின் 60 சதவீதப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக போராட்டக்காரர்கள் கடந்த வாரம் தெரிவித்தனர். ஆனால் அங்குள்ள கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் மூன்று பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அலெப்போ நகரிலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் மீதும் இராணுவம் நேற்று தீவிர தாக்குதல்களை நடத்தியதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறினர்.
பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற குண்டுவீச்சுகளில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. ஆசாஸ் நகரில் ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய மாகாணமான ஹமாவில் இராணுவத்துக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் மோதல் வெடித்துள்ளது. தலைநகர் டமாஸ்கஸின் தெற்கில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதியிலும் கடந்த 2 தினங்களாக பயங்கர மோதல் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment