கிராமங்களில் 50 கால்நடை துணை மருத்துவ நிலையங்கள்: முதல்வர்
சென்னை, ஆக.26: கால்நடை மருத்துவ வசதி இல்லாத குக்கிராமங்களில் ரூ.1 கோடியே 6 லட்சம் செலவில் புதிதாக 50 கால்நடை துணை மருத்துவ நிலையங்களைத் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 843 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்பவும், 20 புதிய கால்நடை மருந்தகங்களை தொடங்க முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.
கால்நடை வளர்ப்பின் நவீன தொழில்நுட்பங்களை கிராமப்புற மக்களுக்கு எடுத்துச் செல்ல வசதியாக கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் 15 மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.
அதேபோல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களை ரூ.2 கோடியே 40 லட்சம் செலவில் புதிதாக தொடங்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதில் ஒரு மையத்துக்கு ஒரு இணை பேராசிரியர், இரண்டு உதவி பேராசிரியர், தட்டச்சர், தொழில்நுட்பப் பணியாளர், அலுவலக உதவியாளர் என 6 பணியிடங்கள் வீதம் 18 பணியிடங்களும் உருவாக்கப்படுகின்றன.
தேசிய பால்வள வாரியத்தின் மூலம் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட பால் பண்ணை, 20 டன் பால்பவுடர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை திருவண்ணாமலை மாவட்டம் அம்மாபாளையத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தொழிற்சாலையை விரைந்து அமைக்கும் வகையில், ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட ரூ.45 கோடி தவிர, மேலும் ரூ.11 கோடியே 51 லட்சத்தை தேசிய பால்வள வாரியத்துக்குக்கு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment