நீல் ஆம்ஸ்ட்ராங் மறைவு; நிலவில் கால்பதித்த முதல் மனிதன்
வாஷிங்டன், ஆக. 26: நீல் ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆம்ஸ்ட்ராங் அமெரிக்காவின் மிகச்சிறந்த மனிதர்களுள் ஒருவர் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
நிலவில் கால்பதித்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங்(82) உடல்நலக்குறைவால் சனிக்கிழமை உயிரிழந்தார். 1969-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி நிலவில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் செயல், மனித குலத்தின் மகத்தான சாதனையாகக் கொண்டாடப்படுகிறது.
நீல் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவுக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிஷெல் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அதிபர் ஒபாமா இது குறித்துக் கூறியது: நிலவில் கால்பதித்த அந்தத் தருணம், மனித குலத்தின் மகத்தான சாதனையை அவர் விவரித்த விதம் ஒருபோதும் மறக்கப்பட முடியாத ஒன்று. அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, எப்போதுமே அமெரிக்காவின் மிகச்சிறந்தவர்களுள் அவரும் ஒருவர். அப்போலோ 11 விண்கலத்தில் தன் குழுவினரோடு விண்வெளிக்குச் சென்ற போது, ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் பேரார்வத்தையும் அவர் சுமந்து சென்றார். கற்பனைக்கும் எட்டாத அமெரிக்கர்களின் தன்னம்பிக்கையை, எதுவும் சாத்தியமே என்பதை அவர் உலகுக்குக் காட்டினார் என்றார் ஒபாமா
No comments:
Post a Comment