click me

Tuesday, August 28, 2012

'பத்ம' விருதுகளுக்கு டிராவிட், கம்பீர் பரிந்துரை

இந்தியாவின் உயரிய விருதுகளான 'பத்ம பூஷண்', விருதுக்கு ராகுல் டிராவிட் மற்றும் 'பத்ம ஸ்ரீ' விருதுக்கு கவுதம் கம்பீர் பெயரை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.,) பரிந்துரை செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான கவுதம் கம்பீர், சமீபகாலமாக டெஸ்ட், ஒருநாள், டி20 என்று மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இவர், பத்ம ஸ்ரீ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல, சமீபத்தில் ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் பெருஞ்சுவர் ராகுல் டிராவிட், சர்வதேச போட்டிகளில் 24 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

இதனை கவுரவிக்கும் விதமாக இவரது பெயரை, பத்ம பூஷண் விருதுக்கும் பரிந்துரை செய்துள்ளனர்.
ஏற்கனவே இந்த ஆண்டு டிராவிட்டுக்கு ராஜிவ் கேல் ரத்னா விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட இவ்விருதுக்கான பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சீனிவாசன் மற்றும் செயலாளர் சஞ்சய் ஜக்டலே, இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு முறையே டிராவிட், கம்பீர் ஆகியோரது பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இதுவரை 9 கிரிக்கெட் வீரர்கள் பத்மபூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 1999ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2008ல் பத்ம விபூஷன் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment