பல தடைகளுக்கு பின்னர் முதல் போயிங் 787 ட்ரீம்லைனர் வரிசையின் முதல் விமானத்தை ஏர் இந்தியா டெலிவிரி பெறுகிறது. இந்த நவீன ரக விமானம் நாளை இந்தியா வந்தடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 27 787 ட்ரீம்லைனர் விமானங்களை ஏர் இந்தியா ஆர்டர் கொடுத்தது. இழப்பீடு வழங்குவதற்கான போயிங்- ஏர் இந்தியா இடையிலான ஒப்பந்தத்தில் ஏற்பட்ட இழுபறியால் இந்த விமானங்களை டெலிவிரி பெறுவதில் பெரும் கால தாமதம் ஏற்பட்டது.
இதேபோன்று, இந்த நவீன ரக விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி அளிப்பதில் ஏர் இந்தியா நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாக எழுந்த புகார்களால் விமானிகள் 58 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், பிரச்னைகள் ஒருவழியாக முடிவுக்கு வந்து தற்போது முதல் 787 ட்ரீம்லைனர் விமானத்தை ஏர் இந்தியா டெலிவிரி பெறுகிறது.
அதிக எரிபொருள் சிக்கனம், நவீன கட்டமைப்புடன் தயாராகும் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் 210 முதல் 250 பயணிகள் பயணிக்க முடியும். ரோல்ஸ்ராய்ஸ் டிரென்ட் 1000 இரட்டை எஞசின்கள் கொண்ட இந்த விமானம் அதிகபட்சம் 14,200 கிமீ முதல் 15,200 கிமீ வரை பறக்கும் திறன் கொண்டது.
வழக்கமான அலுமினிய தகடுகளுக்கு பதிலாக கார்பன் ஃபைபரை பயன்படுத்தி 787 ட்ரீம்லைனர் விமானம் 6.4 டன் எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக உறுதியுடன் இலகு எடை கொண்டதாக இருக்கிறது.
இதனால், சாதாரண ரக விமானங்களை விட 20 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்பதால், நீண்ட தூர பயணங்களுக்கான விமான கட்டணம் குறைக்க வாய்ப்பு இருக்கிறது. உட்புறம் மற்றும் பொருட்களை வைப்பதற்கான இடங்களும் தாராள இடவசதி கொண்டதாக இருக்கும். சொகுசு வசதிகளுக்கும் பஞ்சமிருக்காது.
இந்த புதிய ரக விமானங்கள் முதலில் உள்நாட்டில் இயக்கி சோதனை நடத்தப்பட உள்ளது. இரண்டு மாதங்கள் கழித்து நீண்ட தூரங்களுக்கு இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment