அந்த அணு உலையை செயல்படுத்துவதற்கு எதிராகத் தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில், முதலாவது மற்றும் இரண்டாவது அணு உலைகளில் எரிபொருளை நிரப்புவதற்கும், மின் உற்பத்தியைத் துவக்குவதற்கும் நீதிமன்றம் அனுமதியளி்த்துள்ளது.

அதே நேரத்தில், அந்த உலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தொடர்பாக, உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை அணுத்திறன் ஒழுங்குமுறை வாரிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என நீதிதிகள் பி. ஜோதிமணி மற்றும் எம். துரைசாமி ஆகியோர் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
எந்த ஒரு ஆணையத்திடமிருந்தும் அனுமதி பெறாமல் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வருவதாக தங்களுக்குத் தெரியவில்லை என்றும், கூடங்குளத்தின் இரு அணு உலைகளும் செயல்பாட்டைத் துவக்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மத்திய, மாநில அரசுகள் அந்த அணு உலைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அணு மின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக அரசு விழி்ப்புணர்வுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, அணு உலையைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும், அடிக்கடி அதுபோன்ற பாதுகாப்புப் பயிற்சிகளை மேற்கொள்ள திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அப்துல் கலாம் திட்டம்

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள், அப்பகுதி மக்களுக்காக நவீன மருத்துவமனை ஏற்படுத்தப்பட வேண்டும், சிபிஎஸ்இ மற்றும் மாநிலப் பாடத் திட்டங்களைக் கொண்ட பள்ளிகள், உறைவிட வசதிகளுடன் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய யோசனைகளை ஏற்றுக்கொள்வதாகவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
மீனவர் நலனைப் பொருத்தவரை, அவர்கள் நவீன விசைப்படகுகளை சீரமைக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மீன்களைப் பாதுகாத்து வைக்க குளிர்பதன வசதிகளை ஏற்படுத்துவதற்குத் தேவையான நிதியுதவிகளும் செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகிக்கத் தேவையில்லை
அணு உலையில் எரிபொருளை நிரப்ப அணுத்திறன் ஒழுங்குமுறை வாரியம் அளித்த அனுமதிக்கு எதிராகத் தொடரப்பட்ட மனு மீது நீதிபதிகள் பி. ஜோதிமணி மற்றும் தேவதாஸ் கொண்ட உயர்நீதிமன்ற பெஞ்ச் வழங்கிய இன்னொரு தீர்ப்பில், வாரியம் அளித்த உத்தரவில் சட்டவிரோதமானது எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
அணுத்திறன் ஒழுங்குமுறை வாரியம், அணுத்திறன் சட்டப்படி நிபுணர்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நிபுணர் குழு உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்கும்போது, அதுகுறித்து நீதிமன்றம் சந்தேகப்படத் தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்றும், தேவைப்படும் தருணங்களில், பூகோள சரிநிகர் நிலையைப் பராமரிக்க அதிகாரிகள் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
ஃபுகுஷிமாவுடன் ஒப்பிட முடியாது
ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தையும், கூடங்குளத்தையும் ஒப்பிட்டு, மனுவில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஃபுகுஷிமா விபத்து, மனிதத் தவறு காரணமாக ஏற்பட்டது. அந்த அணு உலை அமைக்கப்பட்ட இடம் தவறானது. நிலநடுக்கம் ஏற்படும் மையப்பகுதியில் இருந்து வெறும் 17 கிலோ மீட்டர் தூரத்தில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கூடங்குளத்தைப் பொருத்தவரை, 1800 கிலோ மீட்டருக்கு அப்பால் அமைக்கப்பட்டிருக்கிறது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
கூடங்குளம் பகுதியில், வரலாற்று ரீதியாக பெரிய அளவில் சுனாமியோ அல்லது நிலநடுக்கமோ ஏற்பட்டதில்லை என்றும், பெருமளவிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இந் நிலையில், அந்தக் குழுவின் அறிக்கையை நம்ப முடியாது என்று எப்படிக் கூற முடியும் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இதனிடையே, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்ப்பு மக்கள் விரோதத் தீர்ப்பு என அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் தலைவரான உதயகுமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment