ஈரானுடன் இந்தியா தனது வர்த்தக உறவை அதிகரிக்க விரும்புகிறது.
இதன் அடிப்படையில் ஈரானில் ஷா பஹார் என்ற துறைமுகத்தில் ரூ.400 கோடியை முதலீடு செய்கிறது.
இதற்கிடையில் பாகிஸ்தான், சீனா இரண்டு நாடுகளுக்கும் மறைமுகமான செக் வைக்கிறது இந்தியா.
இந்தியாவின் தற்போதைய நிலை
தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவைச் சுற்றிய அனைத்து நாடுகளிலும் இந்தியாவுக்கெதிராக தமது இராணுவத்தை நிலை நிறுத்தி வைத்திருக்கிறது சீனா.
இதே போல் மத்திய ஆசியாவிலிருந்து சீனாவுக்கு கடல்வழியே கொண்டு செல்லப்படுகிற எண்ணெய் போக்குவரத்துக்கு இடையூறு எதுவும் வந்துவிடாத வகையில் பாகிஸ்தானின் கத்வார், மாலைதீவுகள் மற்றும் இலங்கையின் அம்பந்தோட்டா ஆகிய பகுதிகளில் சீனா கடற்படையை நிலை நிறுத்தி இருக்கிறது.
வரும் காலத்தில் சீனாவுக்கும் இந்தியாவிற்கும் இடையே மோதல் உருவானால் சீனாவின் கடல்வழி எண்ணெய் போக்குவரத்துக்கு எங்கும் பாதிப்பு வராது.
ஆனால் இந்தியா தம்மை சுற்றியுள்ள நாடுகள் அனைத்தும் நட்பு நாடுகள் என்று நம்பிக் கொண்டே ஏமாந்து கொண்டிருக்கிறது.
இதற்கு சிறந்த உதாரணம் இலங்கையே.. இலங்கை இப்பொழுது சீனாவின் முழுமையான ஆதிக்கம் உள்ள நாடாகவே மாறிவிட்டது.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சரே அந்நாட்டுக்கு சென்று இராணுவ முகாம்களைப் பார்வையிடும் அளவுக்கு இலங்கை சீனாவுக்கு நட்பு நாடாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சீனாவுக்கு செக் வைக்கக் கூடிய வாய்ப்புகளாக ஆப்கானிஸ்தானும் ஈரானும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் அனைத்துமே இந்தியாவை கைவிட்டுவிட்ட நிலையில் இந்த நாடுகளையாவது தக்க வைத்துக் கொள்ளவே இந்தியா போராடி வருகிறது.
இதற்காகவே ஆப்கானிஸ்தானில் பெருந்தொகையான நிதியை முதலீடு செய்து பல்வேறு கட்டமைப்புப் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அங்கிருந்து பெருமளவு தாதுப் பொருட்களை அகழாய்வு செய்து எடுத்தும் வருகிறது.
இதனால் பாகிஸ்தான் நாட்டு எல்லைக்கு மிக அருகில் ஓமன் வளைகுடாவில் இருக்கக் கூடிய "ஷா பஹார்" துறைமுகத்தின் இரண்டாவது விரிவாக்கப் பணிகளில் இந்தியா ஈடுபடுத்திக் கொள்ள இருக்கிறது.
ஷா பஹார் துறைமுகத்தால் இந்தியாவுக்கு கிடைக்கும் பயன்?
இந்த துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் எண்ணெய் வளமிக்க மத்திய ஆசிய நாடுகளை இந்தியா நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.
ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்டு வரும் மேம்பாட்டு பணிகளுக்கும் உதவியாக இருக்கும்.
அத்துடன் பாகிஸ்தானில் சீனா விரிவாக்கம் செய்திருக்கும் கத்வார் துறைமுகமும் இதன் அருகேதான் இருக்கிறது.
சீனாவுக்கு போகிற எண்ணெய் கப்பல்கள் ஷா பஹார் துறைமுகத்தை கடந்துதான் கத்வாருக்கு வந்து சேரும்.
அங்கிருந்து பலுசிஸ்தான் பகுதிகள் வழியே இரயில் மூலமாக எல்லையோர சீனாவின் மாகாணங்களுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது.
வரும் காலத்தில் சீனாவுடன் மோதல் உருவானால் ஷா பஹார் துறைமுகத்தில் இருந்து சீனாவின் எண்ணெய் போக்குவரத்தை தடுப்பது அல்லது தாக்குவது என்பது இந்தியாவுக்கு எளிதாக இருக்கும்.
இதேபோல் தற்போது ஈரானுடனான கச்சா எண்ணெய் வர்த்தகம் மட்டுப்பட்ட நிலையில் இருந்தாலும் எதிர்காலத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு ஷா பஹார் துறைமுகம் உதவியாக இருக்கும்.
தற்போது ஈரான் சென்றிருக்கும் இந்திய அதிகாரிகள் ஷா பஹார் துறைமுகத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
இது பற்றி இந்திய அதிகாரிகள், ஷா பஹார் துறைமுகத்தின் முதல் கட்டப் பணிகளை ஈரான் செய்து முடித்துள்ளது. இரண்டாவது கட்ட விரிவாக்கப் பணியில் இந்தியா தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் என்று கூறியுள்ளனர்.
ஆப்கான் - ஈரான் இடையே இரயில் பாதை
இதே போல் ஆப்கானிஸ்தான் நாட்டின் பாமியான் மாகாணத்திலிருந்து ஷா பஹார் துறைமுகத்துக்கு 900 கிலோ மீற்றர் நீளத்துக்கு இரயில் பாதை அமைக்கும் திட்டத்தையும் இந்தியா நிறைவேற்றித்தர இருக்கிறது.
இதன் மூலம் ஆப்கானிஸ்தானின் பாமியான் மாகாணத்தில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் இரும்புத் தாதுக்களை எளிதாக இந்தியாவுக்கு கொண்டுவர முடியும் என்பதுதான் இந்தியாவின் திட்டம்.
பாகிஸ்தானுக்கு ஒரு டாட்டா
ஷா பஹார் துறைமுகத்தை மேம்படுத்திவிட்டால் இனி ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்டு வரும் பணிகளுக்காக பாகிஸ்தான் நாட்டு வழியே சென்று கொண்டிருக்கத் தேவையே இருக்காது.
இந்தியாவிலிருந்து நேரடியாக ஈரானின் ஷா பஹார் துறைமுகம் மூலமாக எளிதாக ஆப்கானிஸ்தானை அடைய முடியும். பாகிஸ்தானை ஓரம்கட்டிவிடலாம்.
இந்த விவகாரங்கள் குறித்து நவம்பரில் நடைபெற உள்ள இந்தியா- ஈரான் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டுக் கூட்டத்திலும் விவாதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதே போல் ஆப்கானிஸ்தான்- ஈரான்- இந்தியா என முத்தரப்பு பேச்சுகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. |
good
ReplyDelete