click me

Monday, August 13, 2012

முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளிக்க புதிய வலைத்தளம்


சென்னை, ஆக.12   
முதல்வர் 11.8.2012 அன்று தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் தனிப் பிரிவின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு http://cmcell.tn.gov.in/ என்ற புதிய வலைத்தளத்தினையும், மனுதாரர்களுக்கு குறுந்தகவல் மூலம் ஒப்புகைச் செய்தி அனுப்பும் முறையினையும் துவக்கி வைத்தார்.இன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...
" ஏழை எளிய மக்களும், சாமானியர்களும் தங்கள் அடிப்படைத் தேவைகளையும் அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் அவர்களை சென்றடையும் வகையிலும்,  தங்கள் குறைகளை தெரிவித்து உரிய நிவாரணம் பெறும் நோக்கத்துடனும், முதலமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது.தற்போது முதலமைச்சரின் தனிப்பிரிவில் நாள்தோறும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், அஞ்சல் வழி, மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள்  வாயிலாகவும்  நாளொன்றுக்கு சுமார் 3000 முதல் 3500 வரை மனுக்கள் பெறப்படுகின்றன.  இம்மனுக்கள் தனிக் குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் பொது மக்கள் பயனடைந்து வருகின்றனர்.முதலமைச்சரின் தனிப்பிரிவின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு http://cmcell.tn.gov.in/  என்ற புதிய வலைதளத்தினை 11.8.2012 அன்று முதல்வர் துவக்கி வைத்தார். இவ்வலைதளத்தின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதான ஒப்புகைச் சீட்டு  உடனுக்குடன் மனுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும்.புதிய வலைத்தளம் மூலம் பெறப்படும் மனுக்கள், அம்மனு தொடர்புடைய அலுவலகத்திற்கு கணினி மூலம் மாற்றப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.  சம்பந்தப்பட்ட அலுவலகத்திலுள்ள  முதலமைச்சர் தனிப்பிரிவின்  ஒருங்கிணைப்பு அலுவலரின் பெயர் இந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால்  மனுதாரர் அந்த அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.தற்போது அனைவரிடமும் கைப்பேசி பயன்பாடு அதிகமாக இருப்பதால் முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்படும் மனுக்களுக்கு குறுந்தகவல் மூலம்  மனுதாரர்களுக்கு ஒப்புகை செய்தி அனுப்பும் முறையினை முதல்வர் துவக்கி வைத்தார்கள்.அஞ்சல் வழியாக அனுப்பப்படும் மனுக்களில் மனுதாரர் தங்களது கைப்பேசி எண்ணை குறிப்பிடிருந்தால் முதலமைச்சரின் தனிப்பிரிவினால் வழங்கப்படும் பதிவு எண்,  தொடர்புடைய  அலுவலகம் மற்றும் அலுவலர் ஆகிய விவரங்கள முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து  குறுந்தகவல்  மூலம் மனுதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.முதல்வர் 11.8.2012 அன்று மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 113 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித் தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார். ”
-இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Aug 12, 2012

No comments:

Post a Comment