
வியாழக்கிழமை இரவு, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்கள். பெரும்பாலும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அவர்கள், பல்வேறு இடங்களில் பணியாற்றுபவர்கள். அதில் மாணவர்களும் இருந்தார்கள்.
வெள்ளிக்கிழமை அதிகாலை, குவாஹாத்தி செல்லும் இரண்டு சிறப்பு ரயில்களில்
சுமார் 4 ஆயிரம் பேர் புறப்பட்டுச் சென்றனர். சென்னையில் பணியாற்றுவோரைத் தவிர, கோவை மற்றும் மதுரையில் பணியாற்றி வந்தவர்களும் சென்னை வந்து சிறப்பு ரயில்களில் சென்றனர்.சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றும் பிஷ்னு என்பவர் கூறும்போது, 'இப்போதைக்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்காவிட்டாலும், பெரும் அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்றும், வரும் 20-ம் தேதி்க்கு முன்னதாக இங்கிருந்து கிளம்பிவட வேண்டும் என்றும் பெங்களூரில் உள்ள எனது நண்பர்கள் கூறியிருக்கிறார்கள்’ என்றார்.சென்னை சிறுசேரியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றும் பிந்தேஸ்வர் என்பவர் கூறும்போது, தாங்கள் பணியாற்றும் நிறுவனங்கள் எதுவும் தங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கத் தயாராக இல்லை என்று தெரிவித்தார்.
பெங்களூரில் ஏற்கெனவே நான்கு பேர் கொல்லப்பட்டுவிட்டதாக வதந்தி பரவியுள்ளதாகவும், அதே நிலை தங்களுக்கு வந்துவிடக் கூடாது என்று அஞ்சுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அஸ்ஸாமில் உள்ள தங்கள் குடும்பத்தினர், மிகுந்த கவலையுடன் இருப்பதாகவும், தாங்கள் உடனடியாகத் திரும்பிவர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, பிபிசியிடம் பேசிய சென்னை நகர காவல்துறை ஆணையர் ஜே.கே. திரிபாதி, சென்னை நகரில் வடகிழக்கு மாநில மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தார்.ஆனால், சென்னையிலிருந்து இதுவரை எவ்வுளவு பேர் வடகிழக்கு மாநிலங்களுக்குத் திரும்பியிருக்கிறார்கள் என்றோ, அல்லது சென்னையில் அந்த மாநிலத்தவர்கள் எவ்வளவு பேர் தங்கியிருக்கிறார்கள் என்ற விவரமோ தங்களிடம் இல்லை என்று சென்னை காவல் துறை ஆணையர் ஜே.கே. திரிபாதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment