தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித்தர ரூ.1,000 கோடி ஒதுக்கீடு : தமிழக அரசு
சென்னை, செப்.,1: தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரினை போக்கும் விதத்தில் 1,00,000 கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2011ம் ஆண்டு இறுதியில், ‘தானே புயல்’ தமிழகத்தை தாக்கியதன் விளைவாக, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கட்டமைப்புகளையும், பயிர்களையும், வீடுகளையும், படகுகளையும் பலத்த சேதத்திற்கு உள்ளாக்கி, அப்பகுதி மக்களின் உடைமைகளையும், வாழ்வாதாரங்களையும் சூறையாடிவிட்டுச் சென்ற நிலையில், போர்க்கால அடிப்படையில், மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இது மட்டுமல்லாமல், தானே புயலால் வீடு இழந்த மக்களின் துயர் துடைக்கும் வண்ணம், அவர்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ரூ.1,000 கோடி மதிப்பில் 1,00,000 கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.
இதன் அடிப்படையில், தானே புயலால் ஏற்பட்ட இழப்புகளை கருத்தில் கொண்டு, கடலூர் மாவட்டத்தில் 90,000 கான்க்ரீட் வீடுகளையும் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 10,000 கான்கீரீட் வீடுகளையும் கட்டித்தரும் வகையில் ரூ.1,000 கோடி நிதியினை ஒதுக்கி தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்காணும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீடும் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் 200 சதுர அடி அளவில் கட்டித் தரப்படும். ஒவ்வொரு வீடும், குடியிருக்கும் அறை, சமையலறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகள் கொண்டதாக இருக்கும். அரசின் இந்த நடவடிக்கை தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரினை துடைப்பதில் பெரும் பங்கு வகிக்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment