click me

Monday, September 3, 2012

நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை இந்திய கிரக்கெட் அணி முழுமையாக கைப்பற்றியது.


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலாந 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் நடைபெற்று வந்தது.
இந்திய அணி முதல் போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 365 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் ராஸ் டெய்லர் 113 ஓட்டங்களும், வான்வியூக் 71 ஓட்டங்களும் எடுத்தனர். ஒஜா 5 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ஓட்டங்கள் குவித்தது. வீராட் கோஹ்லி 103 ஓட்டங்களும், அணித்தலைவர் டோனி 63 ஓட்டங்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சின் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்கள் எடுத்தது.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக அஸ்வின் 5 விக்கெட் கைப்பற்றினார்.
இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணியின் கடைசி விக்கெட்டான பட்டேல் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 248 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 261 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கவுதம் கம்பீர் 34 ஓட்டங்களும், வீரேந்திர ஷேவாக் 38 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய புஜாரா 48 ஓட்டங்களும், டெண்டுல்கர் 27 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வீராட் கோஹ்லி 9 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்து 51 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி 48 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.

No comments:

Post a Comment