click me

Saturday, September 1, 2012

தமிழகத்துக்கு கூடுதலாக 300 மெகாவாட் மின்சாரம்: என்.எல்.சி. தலைவர் தகவல்

அடுத்த ஆண்டு முதல் தமிழகத்துக்கு கூடுதலாக 300 மெகாவாட் மின்சாரம்: என்.எல்.சி. தலைவர் தகவல்
என்.எல்.சி. தலைவர் சுரேந்தர்மோகன் நெய்வேலியில் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

நெய்வேலியில் 500 மெகாவாட் திறன் கொண்ட 2-வது அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் கட்டுமானப் பணிகள் முடிவுற்று மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் பாரத மிகுமின் நிறுவனத்தின் மேற்பார்வையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

எனவே அக்டோபர் மாத இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கப்படும் என பாரத மிகுமின் நிறுவனம் உறுதியளித்துள்ளது. அதேபோல் 2-வது யூனிட்டில் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் மற்றொரு 250 மெகாவாட் மின்ன உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் என்.எல்.சி. மின் உற்பத்தி 3240 மெகா வாட்டாக உயரும். 

தற்போது என்.எல்.சி.யிலிருந்து 1100 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது. இந்த மின்சாரத்தின் அளவு 2013 மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் 1100 மெகா வாட்டிலிருந்து 1400 மெகா வாட்டாக உயர்த்தி தமிழகத்துக்கு வழங்கப்படும். 
 

தூத்துக்குடியில் என்.எல்.சி.யும், தமிழக மின்வாரியமும் இணைந்து செயல்படுத்தும் நிலக்கரியின் மூலம் இயங்கக்கூடிய 1000 மெகாவாட் மின்நிலையத்தில் கட்டுமான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த மின்நிலையத்தின் இரு உற்பத்திப் பிரிவுகளிலும் 2013-14-ம் ஆண்டில் மின்உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கியத்துவம் அளித்துவருகிறோம். 12-வது திட்ட கால முடிவில் என்.எல்.சி. நிறுவனம் தனது தற்போதைய பழுப்பு நிலக்கரி உற்பத்தித் திறனான ஆண்டுக்கு 30.6 லட்சம் டன்னிலிருந்து 38.85 லட்சம் டன்னாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் தற்போதைய மின் உற்பத்தித் திறனை 2740 மெகாவாட்டிலிருந்து 10 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார். 

பேட்டியின்போது நிறுவன மனிதவளத் துறை இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யா, மின்துறை இயக்குனர் மகிழ்செல்வன், நிதித்துறை இயக்குனர் ராகேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment